பக்கம் எண் :

153

'வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல்' என்பது பழமொழி.

(10)

223. அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்
றடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
இடைய னெறிந்த மரம்.

(சொ-ள்.) படை பெற்று - வேலினது தன்மையைப் பெற்று. அடைய - முகம்முழுதும். அமர்த்த கண் பைந்தொடி - நிறைந்திருக்கின்ற கண்களையும் பசிய தொடியையும் உடையாய், அடைய பயின்றார் - மிகவும் நெருங்கிப் பழகியவர்கள், சொல் கேட்டால் - தமக்கொன்று வேண்டியதாகக் கூறுஞ் சொற்களைக் கேட்டால், இல்லாமை - தன்னிடத்திலில்லாத அப்பொருளை, உடையது ஒன்று தன்னிடத்துள்ளது ஒன்றாகவும், ஆற்றுவரா(க) - அதனைச் செய்வாராகவும், ஒட்டின் - உறுதியாகக் கூறினால், அஃது - அங்ஙனம் கூறுதல், இடையன் எறிந்த மரம் - இடையனால் வெட்டப்பட்ட மரத்தினை யொக்கும்.

(க-து.) முடியாத செயலை முடியும் என்றுகூறற்க.

(வி-ம்.) 'அடையப் பயின்றார்' என்றது தன்னோடு மிகவும் நெருங்கிப் பழகினமையால் கூறியன தட்டமுடியாதாரை. 'ஒட்டின' என்றது அவர்மீதுள்ள அன்பினால் எதுவாயினும் அவர் விரும்பியன தன்னிடத் துளதாகவும் அதனைக் கொடுப்பதாகவும் உறுதி கூறுதலை. இடையன் தழை பெறும் பொருட்டு நாடோறும் மரத்தினைச் சிறிது சிறிதாகக் குறைப்பான். இஃது இடையன் எறிந்த மரம் எனப்பட்டது. இடையனால் எறியப்பட்ட மரம் நாடோறும் குறைந்து வருதல்போலத் தன்னிடத்தில்லாததை உளதாகக் கூறதலால் ஒருவன்புகழ் அதன் வாயிலாகக் குறைந்துகொண்டே போகும் என்பதாம். இடையனால் தழை வெட்டப்படுதல்போல இல்லாததை உளதாகக் கூறுதலால் புகழ் குறைக்கப்படும். ‘ஒல்லாததை ஒல்லு மென்றலும் புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை' என்பதே இக் கருத்தாம்.

'இடையன் எறிந்த மரம்' என்பது பழமொழி.

(11)

224. மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று
இரந்தார், பெறுவதொன் றில்லை - குரங்கூசல்
வள்ளியி னாடு மலைநாட! அஃதன்றோ
பள்ளியுள் ஐயம் புகல்.