(சொ-ள்.) குரங்கு வள்ளியில் ஊசல் ஆடும் மலைநாட குரங்குகள் வள்ளிக்கொடியின்கணிருந்து ஊசலாடுகின்ற மலைநாட்டைஉடையவனே!, மரம்போல் வலிய மனத்தாரை - மரத்தைப்போல வலிய கன்னெஞ் சுடையாரை. முன்நின்று இரந்தார் பெறுவது ஒன்று இல்லை - அவர்முன்பு நின்று இரப்பவர் பெறக்கடவதொரு பொருளுமில்லை; அஃது - அவர் முன்பு நின்று இரத்தல், பள்ளியுள் ஐயம் புகல் - சமணப் பள்ளியுள் இரக்கப்புகுதலை யொக்கும். (க-து.) இரக்க முடையாரிடத்து இரப்பாயாக. (வி-ம்.) 'பள்ளியுள் ஐயம் புகல்' என்றது, பள்ளியுள் வாழ்வார் பிச்சை யெடுத்துண்டு தமக்கென்று ஒரு பொருளுமிலராய்ப் பற்றற்று இருப்பராதலின், அவரிடையே ஐயம்புகுவார்க்கு ஒன்றும் பெறமுடியாது என்பதை. அதுபோல, மனமிலாரிடத்தில் பொருள் பெற முடியாது என்பதாம். பொருளிலராயினும் மனமுடையாரிடத்து இரக்க, அதனாற் பயன்பெறுத லுண்டு. பொருளுடையராயினும், மனமில்லாரிடத்து இரவற்க;அதனால் பயன்பெறுதல் இல்லை. 'இல்லை யென்றிரப்போர்க் கில்லையென்றுரையா இதயம் நீ அளித்தருள்' எனக் கருணன் கண்ணனை நோக்கி மனம் அருளவரம் வேண்டுகின்றமையும் அறியத்தக்கது. 'பள்ளியுள் ஐயம் புகல்' என்பது பழமொழி. (12) 225. இசைவ கொடுப்பதூஉம் இல்லென் பதூஉம் வசையன்று வையத் தியற்கை அஃதன்றிப் பசைகொண் டவனிற்கப் பாத்துண்ணா னாயின் நசைகொன்றான் செல்லுலக மில். (சொ-ள்.) இசைவ கொடுப்பதும் - தன்னால் கொடுக்கக் கூடியவற்றைக் கொடுத்தலும், இல் என்பதும் - கூடாதவற்றை இல்லை யென்று கூறுதலும், வசை யன்று - ஒருவனுக்குக் குற்றமாகாது, வையத்து இயற்கை - அவை பெரியோர்களது செயல்களாம், அஃது அன்றி - அவ்வியற்கையின்றி, பசை கொண்டவன் நிற்க - கொடுப்பான் என்று மனதின்கண் விரும்பி நின்றான் நிற்க, பாத்து உண்ணான் ஆயின் - தன்னிடத்துள்ளதைப் பகுத்துக் கொடுத்து உண்ணாதவனானால், நசை கொன்றான் - நிற்பானது விருப்பத்தைக் கெடுத்தானாதலால், செல்உலகம் இல் - செல்லுகின்ற மறுமை உலகத்தின்கண் இன்பம் அடைதல் இல்லை.
|