பக்கம் எண் :

155

(க-து.) தன்னிடத்துள்ளதைக் கொடாதவனுக்குமறுமையுலகத்தின்கண் இன்பம் இல்லை.

உலகம் : ஆகுபெயர்.

(வி-ம்.) அஃது என்று ஒருமையாற் சுட்டினார், 'வையத்தியற்கை' என்றதனை நோக்கி. 'பசை கொண்டவன் நிற்கப் பாத்துண்ணானாயின்' என்றது. ஒல்லுவது இல்லென மறுத்தலும் என்றதைக் கருதி. 'புலவர் பாடும் புகழுடையோர் வலவனேவா வானவூர்தி எய்துப' ஆதலின், உள்ளத்தை ஈந்தறியாமையின் புகழினைப் பெற்றார்; மறுமை யின்பத்தை அடையார் என்பார், 'செல்லுலகமில்' என்றார். 'நசை கொன்றான் செல்லுலகம் இல்' என்பது பழமொழி.

(13)

226. தமராலும் தம்மாலும்உற்றாலொன் றாற்றி
நிகராகிச் சென்றாரு மல்லர் இவர்திரை
நீத்தநீர்த் தண்சேர்ப்ப! செய்த துவவாதார்க்
கீத்ததை யெல்லாம் இழவு.

(சொ-ள்.) இவர் திரை நீத்தம் நீர்தண் சேர்ப்ப - பரந்த அலைகள் வெள்ளம்போல் பரக்கும் நீரையுடைய குளிர்ந்த கடல் நாடனே!, தமராலும் தம்மாலும் உற்றால் - தம்முடைய சுற்றத்தாராலும் தம்மாலும் ஒருவருக்கு ஓரிடர் வந்து பொருந்தியவிடத்து, ஒன்று ஆற்றி நிகராகி சென்றாரு மல்லர் - ஒரு பொருளுதவி அவர் மனமொப்ப ஒழுகினாருமல்லர். (அதுவன்றி), செய்தது உவவாதார்க்கு - செய்ததைக்கொண்டு மனம் மகிழாதவர்களுக்கு, ஈத்ததை எல்லாம் இழவு - கொடுத்த பொருள்கள்எல்லாம் இழந்த பொருள்களேயாம்.

(க-து.) பெற்றதைக்கொண்டு மனம் உவவாதார்க்குப் பொருள்கொடுத்தல் ஆகாது.

(வி-ம்.) 'சென்றாரும்' என்ற இறந்தது தழீய உம்மை, வறியார்க்கு ஒன்றும் ஈயாராதலே யன்றி என்பதைத் தழுவி நின்றது. தம்மால் ஒருவருக்கு வந்துற்ற இடரினையும் தீர்க்காதவர்களாகிச் செய்தது உவவாதார்க் கீவர். அதனால் இம்மைக்குரிய புகழுமில்லை யாதலின், இழந்த பொருளேயாம்.

'செய்த துவவாதார்க் கீத்ததையெல்லாம் இழவு' என்பது பழமொழி.

(14)