24. ஊழ் 227. எவ்வந் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை தெய்வம் முடிப்புழி என்செய்யும்? - மொய்கொண்டு பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும் கோப்புக் குழிச்செய்வ தில். (சொ-ள்.) பூ புக்கு வண்டு ஆர்க்கும் ஊர - பூவின்கண் புகுந்து வண்டுகள் ஒலிக்கின்ற வயல்நாடனே!, இயங்கும் கோபுக்குழி - (எந்நாட்டின்கண்ணும் தடையின்றிச் செல்ல வல்ல ஆணையையுடைய) பேரரசன் (போர் செய்யப்) புகுந்த இடத்து, குறும்பு - குறுநிலத்தை ஆளுமரசன், செய்வது இல் - எதிர்த்துச் செய்வது ஒன்றுமில்லை (அவன் ஆளுகையின் கீழ் அடங்கியிருப்பான்); (அதுபோல), எவ்வம் துணையாய் - துன்பமே துணையாக, பொருள் முடிக்கும் தாளாண்மை - தான் கருதிய பொருளை முடித்தற்குரிய முயற்சி, தெய்வம் முடிப்புழி - இழவூழே (எதிர்த்து நின்று முடியாதவாறு) முடிக்கின்றவிடத்து, மொய் கொண்டு என் செய்யும் - முயற்சி அதனை எதிர்த்து வலிந்து என்ன செய்ய முடியும்? (கீழ்ப்பட்டேயிருத்தல்வேண்டும்.) (க-து.) இழவூழ் எதிர்த்து நிற்குமிடத்துச்செய்யும் முயற்சியாற் பயனில்லையாம். (வி-ம்.) 'எவ்வம் துணையாய்ப் பொருள் முடிக்கும்' என்று தான் நினைத்ததை முடிக்கும் அருமை கூறியவாறு. அது முடிக்க முயலுமாற்றான் வருந் துன்பமும், அவற்றிற்கு வரும் இடையூற்றை நீக்கலான் வருந் துன்பமும் எனப் பலவாம். பேரரசன் எதிர்த்த ஞான்று குறும்பன் எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது அடிப்படுதல்போல, ஊழே முடியாதவாறு முயலுமிடத்தில் செய்யும் முயற்சியாற் பயனில்லை யென்பதாம். குறும்பு என்பது குறுநிலம்; அஃது ஈண்டு ஆகுபெயராய் நின்றது. 'தெய்வம் முடிப்புழி என் செய்யும்' என்றது. 'ஊழிற் பெருவலியாவுள' என்பதைக் கருதி. 'குறும்பியங்கும் கோப்புக் குழிச் செய்வ தில்' என்பது பழமொழி. (1) 228. சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும் பட்ட விருத்தம் பலவானால், - பட்ட பொறியின் வகைய கருமம் அதனால் அறிவினை ஊழே அடும்.
|