பக்கம் எண் :

157

(சொ-ள்.) சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார் கண்ணும் - குறித்துச் சொல்லப்படும் மிகுந்த அறிவு உடையாரிடத்தும், பட்ட விருத்தம் பலவானால் - உளவாய குற்றங்கள் பலவானால், (அதற்குக் காரணம்) பட்டபொறியின் வகைய கருமம் பொருந்தியிருக்கின்ற பழவினையின் வழிப்பட்டனவாய் இருக்கும் செயல்கள் என்பதறியப்படும், அதனால் - ஆகையால், அறிவினை - நல்லறிவினை, ஊழே - முன் செய்த ஊழே, அடும் -பேதைமையாக்கும்.

(க-து.) மிகுந்த அறிவுடையாரிடத்தும்குற்றங் காணப்படுதல் ஊழானாயது என்பதாம்.

(வி-ம்.) 'சுட்டிச் சொல்லப்படும்' என்றது, கற்றலும் அதற்கேற்றவாறு நிற்றலும் என்றிவற்றில் மிகச் சிறந்தார் என்று குறித்துக் கூறப்படுதலை. இத்தகையோரிடத்துக் குற்றம் காணப்படின், அஃது அவர் இப்பொழுது செய்ததால் வந்தது அன்று, பழவினையால் பிறந்த செயல்களாலாயது என்பதாம். செயல் மாறுபடின், அதற்குக் காரணமாய் உண்ணின்றாற்றும் அறிவும் மாறுபடும். ஆகவே நல்ல அறிவினைப் பேதைப்படுத்து நிற்பது ஊழேயாம். 'பேதைப் படுக்கும் இழவூழ்' என்பதே இது.

'அறிவினை ஊழே அடும்' என்பது பழமொழி.

(2)

229. அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் - பொங்கி
அறைப்பாய் அருவி அணிமலை நாட!
உறற்பால யார்க்கு முறும்.

(சொ-ள்.) பொங்கி அறை பாய் அருவி அணி மலைநாட - மிகுந்து கற்பாறையின்கண் பாயாநின்ற அருவிகளையுடைய மலை நாடனே!, அம் கண் விசும்பின் - அழகிய இடமகன்ற ஆகாயத்தினின்று, அகல் நிலா பாரிக்கும் - மிகுந்த வெண்மையான கிரணங்களை வீசுகின்ற, திங்களும் - மதியும், தீங்கு உறுதல் காண்டும் - கோளாற் றீமை யடைதலைக் காண்கின்றோம். (ஆதலால்) உறற்பால யார்க்கும் உறும் - தமக்கு வரக்கடவ துன்பங்கள் தம்மை மாற்றும் இயல்புடையாரே யெனினும் விடாது அவரைச் சென்று பற்றி நிற்கும்.

(க-து.) வருவது வந்தே தீரும். அதை மாற்றுதலும் ஆகாது. அதன்பொருட்டு வருந்துதலும் ஆகாது.