பக்கம் எண் :

159

அவனுக்கே முடிசூட்டுவது என்று உறுதிசெய்து யானையை விட்டனர். அவ் யானை கருவூரிலிருந்த கரிகாலனைக் கொண்டு வந்து முடிசூடுமாறு செய்தது என்பதாம். 'உய்த்துச் சொரியினும் போகா தம' என்பதே இது.

'உறற்பால தீண்டா விடுதல் அரிது' என்பது பழமொழி.

(4)

231. ஆஅய் வளர்ந்த அணிநெடும் பெண்ணையை
ஏஎய் இரவெல்லாம் காத்தாலும் - வாஅய்ப்
படற்பாலார் கண்ணே படுமே பொறியும்
தொடற்பாலார் கண்ணே தொடும்.

(சொ-ள்.) ஆய் வளர்ந்த அணிநெடும் பெண்ணையை - தனக்கு ஆகி வளர்ந்த அழகிய நீண்ட பனையை, ஏய் இரவு எல்லாம் காத்தாலும் - பொருந்தி இரவு முழுதும் காவல் செய்திருப்பினும், வாய் படற் பாலார் கண்ணே - வாயின்கண் பொருந்துதற் குரியாரிடத்தே, படும் - கீழே விழுந்து அவர்க்குப் பயன்படும். (அதுபோல,) பொறியும் - செல்வமும், தொடற்பாலார்கண்ணே தொடும் - தீண்டுதற்குரியாரிடத்தே சென்று தொடாநிற்கும்.

(க-து.) தனக்கு ஆகாத செல்வத்தைப் பாதுகாப்பினும் நில்லாது.

(வி-ம்.) 'ஆய்' என்றமையால் தன்னுடைய பெண்ணை என்பது பெறப்படும். 'இரவெல்லாம் காத்தாலும்' என்றமையால் பகலிற் காத்தலும் பெறப்படும். எனவே இரவு பகலாய்க் காப்பினும் என்பதாயிற்று. 'வாய்ப் படற்பாலார்' என்றது அதன்பயனை அடைதற்குரியாரை. தனது பெண்ணையை இரவு பகலாய்க் காவல் செய்யினும் அது தனக்குப் பயன் கொடாது, பெறுதற்குரியாற்கே பயன்பட்டாற்போலப் பிறர்க்கு ஆகும் செல்வத்தை எத்துணைக் காவல் செய்யினும் தடைபடாது பிறர்க்கே சென்று ஆகும் என்பதாம். 'பரியினும் ஆகாவாம் பாலல்ல' என்பதே இது.

'பொறியும் தொடற்பாலார்கண்ணே தொடும்' என்பது பழமொழி.

(5)

232. முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்
பிற்பெரிய செல்வம் பெறலாமோ? - வைப்போ
டிகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம்?
முதலிலார்க் கூதிய மில்.