பக்கம் எண் :

16

பாற்று - (இவரோடு வாதாடின் நாம் தோற்போம் என்றெண்ணி) அஞ்சும் தகுதியைஉடையது.

(க-து.) கற்றார் கல்லாரோடு வாதாடுதல்கூடாது.

(வி-ம்.) பரிசு - பண்பு : அஃதாவது நற்பண்பு. தேவரும் கயவரும் தம்மை நியமிப்பாரின்றி விரும்பியவாறு செய்தொழுகுதலின் ஒப்பாராயினும், நன்மை தீமை அறியாராகிய கயவரின் அறிவாராகிய தேவர் இழிந்தவராதலின், கயவரோடு ஒருசொல் கூறுதற்குக்கூட ஆற்றல் இல்லாது போயினர். குறிப்பால் இகழ்ந்தவாறு. சொல்லாடுவாரையும் என்ற உம்மையால் கல்லாரையும், கேளாரையும் காண்டற்கும் அஞ்சவேண்டும் என்பது பெறப்பட்டது. 'பரிசழிந்தாரோடு தேவரும் ஆற்றல் இலர்' - இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

(4)

21. அகலம் உடைய அறி(வு)உடையார் நாப்பண்
புகலறியார் புக்கவர் தாமே - இகலினால்
வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ
பாண்சேரிப் பல்கிளக்கும் ஆறு.

(சொ-ள்.) அகலம் உடைய அறிவு உடையார் நாப்பண் - கல்வி கேள்விகளில் விரிவு உடைய இயற்கை அறிவினார் இடையில், புகல் அறியார் - நுழைதற்குத் தகுதியற்ற கயவர்கள், புக்கு - புகுந்து, அவர் தாமே இகலினால் வீண் சேர்ந்த புன்சொல் விளம்பல் - (தம் சொற்களை யாரும் விரும்பாமல் இருக்கவும்) தாமே மாறுபாட்டினால் வீணான பயனற்றவற்றைக் கூறுதல், பாண்சேரிபற்கிளக்கும் ஆறு அது அன்றோ - பாணர்கள் தெருவில் ஒருவன் வாய்திறந்து பாடுவதைப்போல அஃது ஆகும்அல்லவா!

(க-து.) கற்றாரிடைக் கல்லார் வீண்வார்த்தைகளைப் பேசாதொழிதல் வேண்டும்.

(வி-ம்.) பல்கிளத்தல் - வாய்திறந்து பாடுதல், அவர் இழிவு தோன்றப் பல்கிளத்தல் என்றார். 'பாண் சேரிப் பற்கிளக்கும் ஆறு' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(5)

22. மானமும் நாணும் அறியார் மதிமயங்கி
ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து
ஞானம் வினாஅய் உரைத்தல், நகையாகும்
யானைப்பல் காண்பான் புகல்.