பக்கம் எண் :

160

(சொ-ள்.) முன் - முற்பிறப்பின்கண், பெரிய நல்வினை - மிகுந்த நன்மை பயக்கும் அறங்களை, முட்டு இன்றி - தடையில்லாது, செய்யாதார் - செய்யாதவர்கள், பின் - பிற்பிறப்பின் கண், பெரிய செல்வம் பெறலாமோ - மிகுந்த செல்வத்தைப் பெறக்கூடுமோ?, வைப்போடு - பிறர் வைத்திருக்கின்ற செல்வத்தோடு, இகலி பொருள்செய்ய எண்ணியக்கால் - மாறுபட்டுப் பொருளினைச் செய்வோம் என்று நினைத்தால், என் ஆம் - எங்ஙனம் முடியும், முதல் இல்லார்க்கு - வைத்ததொரு முதற்பொருள் இல்லாதவர்களுக்கு, ஊதியம் இல் - (அதனால் வரும்)பயனில்லையாதலால்.

(க-து.) முன் செய்த நல்வினையில்லார் முயன்றாலும் பொன்னைப் பெற முடியாதாம்.

(வி-ம்.) 'நல்வினை' என்றது செல்வமுடையராதற் கேதுவாய வினை யென்பதாம். ஒருமை வினை எழுமையுந் தொடர்ந்து நிற்றலின் வீழ்நாள் படாது செய்க என்பார் 'முட்டின்றி' என்றார். பொருள்மேலுள்ள விருப்பத்தால் அவரைப்போன்று யாமுஞ் செய்வோமென்று முயலினும் கைகூடுதலில்லை.முதல் இல்லாதவர்களுக்கு அதனால்வரும் ஊதியம் இல்லையானாற்போலமுற்பிறப்பின்கண் செய்த நல்வினையிலார்க்குச்செல்வம் இல்லையாகும்.

'முதலிலார்க்கு ஊதியம் இல்' என்பது பழமொழி.

(6)

233. பன்னாளும் நின்றவிடத்தும் கணிவேங்கை
நன்னாளே நாடி மலர்தலால் - மன்னர்
உவப்ப வழிபட் டொழுகினும், செல்வம்
தொகற்பால போழ்தே தொகும்.

(சொ-ள்.) பல்நாளும் நின்ற இடத்தும் - பலநாளும் தானே நின்ற விடத்தும், கணிவேங்கை - கணியாகிய வேங்கை, நல்நாளே நாடி மலர்தலால் - தான் பூத்தற்குரிய நல்ல நாளையே அறிந்து பூத்தலால், மன்னர் உவப்ப வழிபட்டு ஒழுகினும் - அரசர் மனமகிழுமாறு வேண்டியன செய்து வழிபட்டு ஒழுகினாலும், செல்வம் தொகற்பால போழ்தே - செல்வம் ஒருவர்க்குக் கூடும் பொழுதுதான், தொகும் - பல்லாற்றானும் வந்து சேரும்.

(க-து.) ஒருவனிடம் செல்வம், வருங்காலமறிந்தே வரும்.

(வி-ம்.) வேங்கை தானே முன்னர்ப் பலநாள் இருப்பினும் பூத்தல் இல்லை. பூத்தற்குரிய காலம் வந்ததும் பூக்கும்இயல்பையுடையது.