பக்கம் எண் :

161

கணியும், வேங்கையும் பொதுப்பெயர்களாயினும் சிறப்புப் பெயரும் பொதுப்பெயருமாய் நின்று வேங்கை மரம் என்பதை உணர்த்தின. இஃது இருபெயரொட்டு. நன்னாள் என்றது மணநாளை. மணநாளில் வேங்கை மலர்தல் இயல்பு. கணி என்பது, காலத்தைக் கணித்தலின் காலங்கணிக்க வல்லார்க்கும், வேங்கையும் மணநாட்களைக் கணித்தலின் வேங்கைக்கும் ஆயின. 'மன்னர் உவப்ப வழிபட்டு ஒழுகினும்' என்பது வேண்டிய செல்வத்தை அரசர்கள் கொடுக்கும் நிலையிலிருப்பினும் என்பதாம். வேங்கை பூக்குங்காலமாகிய மணநாளறிந்து பூத்தல்போலச் செல்வமும் வருங்காலமறிந்தே வரும்.

'செல்வம் தொகற்பால போழ்தே தொகும்' என்பது பழமொழி.

(7)

234. குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்
புரைத்தெழுந்து போகினும் போவர் - அரக்கில்லுள்
பொய்யற்ற ஐவரும் போயினார் இல்லையே
உய்வதற் குய்யா விடம்.

(சொ-ள்.) குரைத்து கொளப்பட்டார் - ஆரவாரித் துரைத்தலின் அவரால் பிணித்துக் கொள்ளப்பட்டார், கோள் இழுக்குப்பட்டு - அவர் எண்ணம் பழுதுபட, புரைத்து எழுந்து போகினும் போவர் - அவர் பிணிப்பினின்றும் தப்பி எழுந்து உய்ந்து செல்லினும் செல்வர். அரக்கு இல் உள் - அரக்காற் செய்யப்பட்ட மாளிகையினுள்ளே யிருந்த, பொய் அற்ற ஐவரும் - குற்றமற்ற பாண்டவர் ஐவரும், போயினார் - தீயினின்றும் தப்பி நிலவறையின் வழியே சென்றனர். (ஆதலால்), உய்வதற்கு - பிழைத்தற்குரிய உயிருக்கு, உய்யா இடம் இல் - பிழைக்க முடியாதஇடம் என்று ஒன்றும் இல்லை.

(க-து.) ஊழ்வலியுடையார் எத்தகையஇடையூறுறினும் உய்வர்.

(வி-ம்.) குரைத்து என்பது செயவெனெச்சப் பொருளில் காரணப் பொருட்டாய் நின்ற வினையெச்சம். அது கொளப்பட்டார் என்னும் வினையாலணையும் பெயரின் முதனிலையோடு முடிந்தது. குரைத்தல் : மரபுச்சொல். அவர் இழிபு விளக்கிய வந்தது. இது, தீய எண்ணமில்லார் போன்று அவர் நம்புமாறு ஆரவாரித்துப் பேசுதல். மிக்க ஆரவாரம் ஐயத்திற்கிடம் என்று அறிய வேண்டும். கொளப்பட்டார் என்றது அவர் ஆரவாரத்தை நம்பி, பிணிக்கப்பட்டாரை. கோள் என்றது அவரைப் பிணித்துத்துன்புறுத்த நினைத்த நினைவை.