'இழுக்குப்பட்டு' என்பது செயவெனெச்சப் பொருள்மேல் நின்றது. 'போகினும்' என அவர் போகாதவாறு பிணித்தலின் திண்மை குறிப்பிடப்பட்டது. இனி, போகினும் என்றதற்கு ஊழ்வலியுடையாராதலின் அவர் பிணித்த பிணிப்பையே தமக்கு நன்மை தருவதாக ஆக்கிச் செல்லினும் செல்வர் எனலுமாம். பொய், குற்றங்களைந்தனுள் ஒன்று ஆதலின், குற்றம் எனப் பொருள் கூறப்பட்டது. 'உய்யாவிடம் இல்லை' என்பது பிழைக்கின்ற உயிருக்குப் பிழைக்க முடியாத இடம் என்று ஒன்றுமில்லை. எல்லாம் உய்தற்குரிய இடமேயாம். ஐவரும் உய்ந்தாரெனச் சான்று காட்டியவாறு. 'இல்லையே உய்வதற்கு உய்யாவிடம்' என்பது பழமொழி. (8) 235. இதுமன்னுந் தீதென் றிசைந்ததூஉம் ஆவார்க்கு அதுமன்னும் நல்லதே யாகும் - மதுமன்னும் வீநாறு கானல் விரிதிரைத் தண்சேர்ப்ப! தீநாள் திருவுடையார்க் கில். (சொ-ள்.) மதுமன்னும் வீ நாறு கானல் - தேன் ஒழுகுகின்ற குவளைப்பூக்கள் மணம் வீசுகின்ற கடற்சோலையையுடைய, விரிதிரை தண் சேர்ப்ப - விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே!, இது தீது மன்னும் என்று இசைந்ததும் - இவ்வினை இவர்க்குத் தீங்கினை நிலை நிறுத்துவதாம் என்று கருதப்பட்டுப் பொருந்தியதும், ஆவார்க்கு - செல்வம் உடையராவார்க்கு (பொருளை ஈட்டுவார்க்கு), அது மன்னும் நல்லதேயாகும் - அவ்வினை (ஊழால்) நல்லதாகவே முடியும் (ஆதலால்), தீ நாள் - தீய நாட்கள், திருஉடையார்க்கு - முன்செய்த நல்வினை உடையார்க்கு இல் -உண்டாதலில்லை. (க-து.) ஆகூழ் உடையார்க்குத் தீயனவும் நல்லனவாக முடியும். (வி-ம்.) 'மன்னும்' இடைச் சொல்லடியாகப் பிறந்த வினைச்சொல். ஏனைய இரண்டும் மிகுதி; கழிவுப் பொருண்மைக் கண் நின்றது. செல்வம் ஈட்டுவார்க்குத் தீதாக வருவதும் ஊழ் வயத்தான் நல்லதாகவே முடியும். இதுவன்றி 'ஆக்கும்' என்பது 'ஆகும்' என இடைக் குறைந்ததாகக் கொண்டு, வந்த தீமை தான் நல்லதாயதேயன்றி மேலும் மேலும் நன்மைகளை உளவாக்கும் எனக் கூறலும் ஒன்று. வரும் தீமை ஊழால் நல்லதாக மாற்றப்படுதலின் நல்வினை உடையார்க்குத் தீமை தரும் நாட்களே இல்லை என்று முடிவுகூறப்பட்டது. 'தீ நாள் திருவுடையார்க் கில்' என்பது பழமொழி. (9)
|