236. ஆற்றுந் தகைய அரசடைந்தார்க் காயினும் வீற்று வழியல்லால் வேண்டினும் கைகூடா தேற்றார் சிறிய ரெனல்வேண்டா நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி. (சொ-ள்.) ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும் - எல்லாச் செல்வங்களையும் தரவல்ல தகுதியை உடைய அரசுகளை அடைந்தவர்களுக்கே யானாலும், வீற்று வழியல்லால் - நல்வினையுள்ளவழி அல்லது, வேண்டினும் கைகூடா - விரும்பி முயன்றாலும் கருதிய செல்வம் கைகூடுதல் இல்லை. (ஆதலால்), தேற்றார் சிறியர் எனல்வேண்டா - அறிவில்லாதவர்கள் அதனைப் படைத்தல் முதலிய ஆற்றல் இலராகலின் செல்வத்தாற் சிறியர் என்று கருதவேண்டா; நோற்றார்க்கு - தவம் செய்தார்க்கு, சோற்றுள்ளும் கறி வீழும் - சோற்றினுள்ளேயும் கறி தானே வந்து விழும்அவர் தவவலிமையால். (க-து.) அறிவிலாராயினும் நல்வினையுள்ளார்க்குச் செல்வம் உளதாம். அரசர்களேயாயினும் அஃதிலார்க்குக் கருதியகைகூடுதல் இலவாம். (வி-ம்.) 'அரசு அடைந்தார்' என்றது எல்லாவற்றையும் தரும் ஆற்றல் உடைய அரசர்களை அடைந்தாராயினும் நல்வினையுள்ள வழியல்லது அவர் கருதியன கைகூடா. இஃது ஆற்றலால் உயர்ந்தார்களைக் காட்டி அவரினும் ஊழ் வலியுடைத்து என்றவாறு. வீறு - பெருமை காரணமாகிய நல்வினைக்கு ஆகிவருதலின் காரியவாகு பெயராம். 'தேற்றார் சிறியர்' என்றது அறிவில்லாதவர்கள் செல்வத்தைப் படைத்தல், காத்தல் முதலிய செய்தல் அறியாமையின் செல்வத்திற் சிறியர் எனக் கருதுதல். 'எனல் வேண்டா' என்றது, செல்வத்தை ஆக்கும் ஊழ் வேறு; அறிவை ஆக்கும் ஊழ் வேறு; அறிவிலார் செல்வமுடையராகக் காண்டலின் செல்வமுடையராதற்கு அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா; ஊழ் ஒன்றே வேண்டப்படுவது. ஆகவே அறிவிலார் செல்வம் பெறார் என்று கருதவேண்டாம் என்பதாம். 'நோற்றார்க்கு - வீழுங் கறி' என்றது தவம் செய்வார் சோறுண்பார், கறி உண்பார் என்பன கருத்தன்றி ஊழினுடைய வலிமையை உணர்த்தும் பொருட்டுத் தவம் செய்வார் ஆற்றலைக் கூறியவாறாம். நோன்றல் - பொறுத்தல். தம்முயிர்க்கு வரும் பசி முதலியனவற்றைப் பொறுத்தலின் தவம் செய்வார் நோற்றார் எனப்பட்டார். நோற்றார்க்குத் தவவலிமையால் கறி உளவாதல்போல அறிவிலார்க்கும் ஊழ் வலியான் செல்வமுண்டாம். ஆகவே ஊழ், முடிக்கும்ஆற்றலுடைய
|