பக்கம் எண் :

165

ஊட்டும் என்பதாம். ஆகவே ஆகூழ் மிக நெருங்கப்பெற்றானுக்கு முயற்சியால் வருந் துன்பமும் இன்றி வருமென்பார், ஆள்வினையும் வேண்டா என்றார். ஊழ்பயனை எய்துவிப்பது ஆள்வினையின் வாயிலாகவாதலின் உம்மை சிறப்பும்மை. பொறி என்பது அறிவு. அறிவான் ஆயது வினை. உடம்பு செய்த வினைக்குக் காரியமாயும் மேல்வரும் பிறப்புக்களுக்குரிய வினைகளை இருந்து ஆற்றுதலின் கருத்தாவுமாயும் இருத்தல்போல ஊழ், வினையது காரியமாயும், அதனை உடையானிடத்துச் செலுத்தும் தொழிலில் கருத்தாவுமாயும் இருப்பது. வினையும் ஊழும் கருத்தா காரிய சம்பந்தமுடையன. பொறி வினைக்காகிப் பின்னர் ஊழுக்காகி நிற்பது இருமடியாம்.

(11)

238. பண்டுருத்துச் செய்தபழவினை வந்தெம்மை
இன்றொறுக் கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்
மேவலரை நோவதென்? மின்னேர் மருங்குலாய்!
ஏவலாள் ஊருஞ் சுடும்.

(சொ-ள்.) மின் நேர் மருங்குலாய் - மின்னலை யொத்த இடையை யுடையாய்!, ஏவலாள் - பிறர் ஊரைக் கொளுத்தும் பொருட்டு ஒருவனால் அனுப்பப்பட்ட ஏவலாளன், ஊரும் சுடும் - ஏவியவனது ஊரையும் கொளுத்திவிடுவான். (ஆதலால்), பண்டு உருத்து செய்த பழவினை - முன்பிறவிகளில் மிகுதியாகத் தாம் செய்த பழைய தீவினை, இன்று வந்து எம்மை ஒறுக்கின்றது என அறியார் - இப்பிறப்பில் வந்து எம்மைத் தண்டிக்கின்றது என்று அறியாராய். துன்புறுக்கும் மேவலரை - ஏவலாளாக நின்று துன்புறச்செய்யும் பகைவரை, நோவது என் - வெறுப்பது எது கருதி?

(க-து.) பிறர் தம்மைத் துன்புறுத்துவது தாம் செய்த பழவினைப்பயனே என்றறிந்து அவரைநோவாதொழிதல் வேண்டும்.

(வி-ம்.) 'வந்து' என்றார், கன்று, பல்லாவுள் தாய் நாடிக்கோடல்போல் செய்தானைத் தானே அடையும் ஆற்றலுண்மை பற்றி. ஒறுத்தல் என்றது, தண்டித்தலை. உடம்பை வருத்துதலுக்கு வருத்தல் என்று கூறுவது மரபாம். 'மெய்வருத்தக்கூலி தரும்' என்பதுங் காண்க. அதுபோல ஒறுத்தல் என்பது செய்த தீமைக்குத் தக்கவாறு துன்புறுத்தலுக்கு அல்லது தண்டித்தலுக்கு வழங்கும் மரபுச் சொல்லாம். 'இன்னா செய்தாரை ஒறுத்தல்' என்றதுங் காண்க. 'துன்புறுக்கும் மேவலர்' என்பது பழவினை ஒருவனுக்கு இன்பத்தையோ அன்றித் துன்பத்தையோ ஊட்டின் பிறர்வாயிலாக நின்று ஊட்டும் என்பதுஅறிவித்தற்காம்,