யான் செய்த வினையால் வரற்பாலதாகிய இஃது இவர் வாயிலாக வந்தது என்று தான் செய்த வினை காரணமாயிருக்கத் தண்டிக்கும் அவரை நோவதற்கிடனின் றென்பார் 'நோவது என்' என்றார். ஏவலாள் ஊருஞ்சுடும் என்றது, தன்னால் ஏவப்பட்டானே தனது ஊரைக் கொளுத்துவான் என்பது கருதி.அதுபோலத் தன்னாற்செய்யப்பட்ட வினையே தன்னைஒறுக்கும் என்பதாம். 'ஏவலாள் ஊருஞ் சுடும்' என்பது பழமொழி. (12) 239. சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை உயிருடையார் எய்தா வினை. (சொ-ள்.) சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும் - பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற்சோழனும், பிடர்த்தலைப் பேரானை பெற்று - இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று, கடைக்காலத்தில் - பிற்காலத்தில், செயிர் அறு செங்கோல் செலீ இயினான் - குற்றமற்ற செங்கோலைச் செலுத்தினான்; (ஆதலால்), உயிருடையார் எய்தா வினை இல்லை - உயிருடையார் அடையமுடியாததொரு நல்வினைப் பயன் இல்லை. (க-து.) தீமையே அடைவார், என்றாயினும்நன்மையையும் அடைவர். (வி-ம்.) பகைவர் மூட்டிய தீயினின்றும் தப்பி ஓடும் பொழுது கால் கரிந்தமையால் இவன் கரிகாலன் எனப்பட்டான். அரசினை இழந்து உயிர் பிழைக்க முடியாத நிலையிலிருந்த கரிகாலனும் பின்னொருகால் அரசாட்சி பெற்று நன்மையை அடைந்தான். எப்பொழுதும் அதுபோன்ற துன்பத்தினையே அடைவேமோ என்று கருதற்க. ஒரு காலத்தில் இன்புறலாம் என்பதாம். 'செயிரறு' என்றமையால் பின்னர்ச் சிறந்த இன்பங்களை அடையலாம் என்பது போதரும். ஒவ்வோர் உயிருக்கும் ஒரு பிறவியில் இன்பமும் மற்றொரு பிறவியில் துன்பமும் என்று தனித்தனி வகுக்காது ஒரே பிறவியில் இன்பமும் துன்பமும் அடையுமாறு ஊழ் வகுத்தலின் துன்பமடைவார் இன்பத்தை அடைதலும் உறுதி என்பதாம். இதை 'எய்தா வினை இல்லை' என்றார். இது கருதியே ஊழும் முறை யெனப்பட்டது.
|