பக்கம் எண் :

167

'துன்புள தெனினன்றோ சுகமுளது' என்பதுஞ் சான்றாம். சோழன் சிறுமையினால் துன்புற்றமை, பின்னர்ச் செங்கோலைக் குற்றமில்லாது நடத்துதற்கு ஏதுவானமைபோல முன்னர் அடைகின்ற துன்பம் பின்னர் வருகின்ற இன்பத்துக்கு ஆக்கந்தருவதாம் என்றறிதல் வேண்டும். எமக்குத் துன்பத்தையே படைத்தான் போலும், என்று ஏக்கறுவாரை நோக்கி இன்பமும் துன்பமும் ஒவ்வொரு பிறப்பிலும் படைக்கப்பட்டிருக்கின்றன. துன்பமடைவார் சோர்வின்றித் துணைபெற்று முயற்சிசெய்யின் சிறந்த நன்மைகளை அடையலாம் என்று கூறி அதற்குச் சான்றாகக் கரிகாலனைக் கூறினார். இரும்பிடர்த்தலையார் என்பவர் கருங்கை கொள்வாள் பெரும்பெயர் வழுதியைப் பாடிய பாட்டில் யானையின் கழுத்தை 'இரும்பிடர்த்தலை'என்று சிறப்பித்தலின் இப்பெயர் பெற்றார்.

'உயிருடையார் எய்தா வினை இல்லை' என்பது பழமொழி.

(13)

240. நனியஞ்சத் தக்க அவைவந்தால் தங்கண்
துனியஞ்சார் செய்வ துணர்வார் - பனியஞ்சி
வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!
ஊழம்பு வீழா நிலத்து.

(சொ-ள்.) பனி அஞ்சி வேழம் பிடி தழுவும் - பனியான் வரும் குளிருக்கஞ்சி ஆண்யானை பெண்யானையைத் தழுவுகின்ற, வேய்சூழ் மலைநாட - மூங்கில்கள் நெருங்கியிருக்கின்ற மலை நாடனே! ஊழ் அம்பு நிலத்து வீழா - ஊழாற் செலுத்தப்படும் அம்புகள் குறிக்கிலக்கானவனைச் சென்று சேர்தலன்றி நிலத்தின் மேல் வீழ்தல் இல, நனி அஞ்சத்தக்க அவை வந்தால் - மிகவும் அஞ்சத்தக்க அவ்வம்புகள் தம்மீது வந்தால், செய்வது உணர்வார் - செய்கின்றதன் நன்மை தீமையை அறிவார், தங்கண் துனி அஞ்சார் -அவற்றால் தமக்கு உண்டாகும் துன்பத்திற்கு அஞ்சுதல்இலர்.

(க-து.) நன்மை தீமையறிவார் ஊழான் வருந்துன்பத்திற்கு அஞ்சுதல் இலர்.

(வி-ம்.) ஊழ் குறியறிந்து எய்தலின் தவறுதல் இல்லையென்பார், 'நிலத்துவீழா' என்றார். அம்பாதல் ஒப்புமை நோக்கி நிலத்துவீழா என்றாரெனினும், சென்று சேராதொழிதல் இல்லையென்பது அதன் பொருள், 'அஞ்சார்' என்றார், நன்மை தீமையறிவார் தாம் அஞ்சினும் அவை விடா என்பதனைஅறிந்தும்