அவையும் தம்மால் முன்பு செய்துகொள்ளப்பட்டனவே என்று அறிந்தும் அஞ்சுதலிலராகலின். தழுவும்என்பது தழுஉம் என்றாயது விகாரம். 'ஊழம்பு வீழா நிலத்து' என்பது பழமொழி. (14) 25. அரசியல்பு 241. எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால் தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால் வன்கண்ண னாகி ஒறுக்க ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு. (சொ-ள்.) எம்கண் இனையர் என கருதின் - அரசன் நீதி கூறுமிடத்து எமக்கு இவர் (நட்டார், பகைவர்) இத்தன்மையை உடையார் என்று கருதுவானாயின், ஏதம் - அது செங்கோன்மைக்குக் குற்றமாம், தம் கண்ணரானும் - தமது கண்போல்வாராயினும், தகவுஇல கண்டக்கால் - தகுதியற்ற செயல்களை அவர்களிடத்துக் கண்டபொழுது, வன்கண்ணனாகி - வன் கண்மையை உடையவனாகி, ஒறுக்க - அவர்களைத் தண்டிக்க, ஒறுக்கல்லா மென்கண்ணன் - தண்டஞ் செய்யாத கண்ணோட்டமுடையான், அரசு ஆளான் -அரசினை ஆளும் தகுதியில்லாதவனே ஆவான். (க-து.) அரசன் நடுநிலையிலிருந்துநீதி கூறவேண்டும். (வி-ம்.) அரசன் நினைத்த அளவில் அவர்க்கு அதனாலாம் நன்மை தீமை பலவாதலின் நினைத்தலும் தீதென்றார். பெரியோர்களது நினைவு ஒன்றே பெருஞ்செயல்களைப் பயக்கும் ஆற்றலுள்ளது. 'குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து' என்பதும் காண்க. 'அவனை முறை காக்கும் முட்டாச் செயின்' என்றலின், அவன் நடுவுநிலையினின்றும் பிறழவே அவனைச் செங்கோல் காத்தல் இல்லையாம். இஃது 'ஏதம்' எனப்பட்டது. 'கண்டக்கால்' என்றது, 'அரசன் அன்று ஒறுப்பான்' என்றதைக் கருதி. 'ஆகி' ஒறுக்க என்றது, நீதி கூறுமிடத்து நடுநிலையில் இருத்தல்வேண்டும் என்பதைக் குறித்து நின்றது. கண்ணோட்டம் கண் சென்றவழி நிகழ்வதாகலின், 'மென்கண்ணன்' எனக் காரியத்தைக் காரணமாகக் கூறினார். மென்மையும் கண்ணுக்காகாது அதன் காரியத்திற்காயிற்று. யார்மாட்டும் கண்ணோட்டங்கொண்டொழுகின் பகைவரால் நலியப்பட்டு அரசு ஒழியும் என்பார், 'ஆளான் அரசு'
|