என்றார். எம், தம் என்றதற்கேற்பப் பன்மைகூறாது வன்கண்ணனாகி, ஆளான் என ஒருமையாற் கூறப்பட்டன. முன்னது உயர்வினும், பின்னது செறலினும் பன்மை ஒருமைமயக்கமாயின. 'மென்கண்ணன் ஆளான் அரசு' என்பது பழமொழி. (1) 242. சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலைக் கழிந்ததன் பின்றையும் - மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் முறைமைக்கு மூப்பிளமை இல். (சொ-ள்.) சான்றவர் - அறிவு நிரம்பிய அமைச்சர்கள். சால மறைத்து ஓம்பி கை கரப்பவும் - மிகுதியானவைகளைக் கூறி இது பெருங்குற்றமல்லவென்று மறைத்து, அதற்கு மறை மொழிந்தபடி செய்தலே அறமென்று பாதுகாவலும் செய்து அரசன் நினைத்திருந்த செயலைக் கரப்பவும், காலை கழிந்ததன் பின்றை - அன்றிரவு கழிந்த பின்னர், மேலை - முன்னாள், கறவை கன்றூர்ந்தானை - பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை, தந்தையும் ஊர்ந்தான் - அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்; (ஆகையால்), முறைமைக்கு மூப்பு இளமை இல் - செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை. (க-து.) முதுமை இளமை கருதி நீதி கூறலாகாதென்பதாம். (வி-ம்.) 'சாலமறைத்து' என்றது இதுபோன்ற பழைய நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறி அடிப்பட்டு வந்தமையால் இது பெருங் குற்றமல்லவென்று கூறுதலை. 'ஓம்புதல்' என்றது அந்தணர்கள் கூறுகின்ற முறைப்படி பொன்னால் ஆன்கன்று செய்து அவர்க்கே அளித்தல் இதற்குத் தீர்வாகும் என்று கூறி அத்தீவினையினின்றும் அவரைப் பாதுகாத்தலை. 'கை கரப்பவும்' என்றது மகனைக் கோற நினைத்த நினைவை மறைக்கவும் என்பதாம். பின்றையும் என்பதிலுள்ள உம்மையைப் பிரித்துக் கரப்ப என்பதனோடு கூட்டுக. 'சால மறைத்தோம்பி' என்றது கரத்தலுக்கு ஏதுவாயிற்று. கழிந்தது என்றது அரசன் இரவற்ற துன்பத்தையும், விடுதலை நோக்கிய வேட்கையையும் உணர்த்தும். தந்தைக்கு ஏற்ப மகனென்னாது கன்றூர்ந்தானை என்றார், மகன் செய்த தீமை தந்தை உளத்தில் நின்று கொதித்தலின் மகனெனக் கூற மனம் இயையாமையின். 'தந்தையும்' என்னும் முற்றும்மை ஊர்தலின் அருமை தோற்றுவித்து நின்றது. இனி
|