பக்கம் எண் :

17

(சொ-ள்.) மானமும் நாணும் அறியார் - கல்லார் தம் மானமும் நாணும் அழிதலை அறியாராய், மதிமயங்கி - புத்தி மயக்கத்தை யடைந்து, ஞானம் அறிவார் இடைப்புக்கு - பல நூல்களையும் அறிவார் நடுவிற் புகுந்து, தாமிருந்து - அவர்களை ஒப்பத் தாமும் இருந்து, ஞானம் வினாய் உரைத்தல் - நூல்களை வினாவி உரைக்கப்புகுதல், யானை பல் காண்பான் புகல் - யானையைப் பல்பிடித்துப் பார்க்கப் புகுதல் போல், நகையாகும் - யாவர்க்கும் நகைதருஞ்செயலாகும்.

(க-து.) கற்றார் அறிவின் திறனைக் கல்லார் அறிய முயலுதல்நகைப்பிற் கிடனாம்.

(வி-ம்.) மானம் - தந்நிலையிற்றாழாமையும் தாழ்வு வந்துழி வாழாமையுமாம். நாணம் - தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையராந்தன்மை. ஞானம் - வீடுபயக்கும் உணர்வு - அவ்வுணர்வை நூல்கள் தருதலின் நூல்களுக்காயிற்று. ஞானம் : ஆகுபெயர். மதிமயங்கி எனவே ஞானம் அறியார் இடைப்புகுதலே அவர்க்கு இயல்பு என்பதாம். ஞானம் வினாவி உரைத்தலோடு அமையாது அவரோடு ஒப்ப வீற்றிருந்த செய்கை நகைப்பிற்கிடனாயிற்று. 'யானைப் பல் காண்பான் பகல்' என்பதும் ஒரு பாடம். 'பகல்' என்று கூறுதலிற் பொருட்சிறப்பு ஒன்று மின்மையின் 'புகல்' (புகுவதனோடொக்கும்) என்பதே பாடமாகக் கொள்ளப்பட்டது. (இது தி. சுப்பராயச் செட்டியார் கொண்ட பாடம்.) 'யானைப்பல் காண்பான் புகல்' - இஃது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

(6)

23. அல்லவையுள் தோன்றி அலஅலைத்து வாழ்பவர்
நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் - கல்வி
அளவிறந்து மிக்கார் அறி(வு) எள்ளிக் கூறல்
மிள(கு) உளு உண்பான் புகல்.

(சொ-ள்.) அல்லவையுள் தோன்றி அல அலைத்து வாழ்பவர் - கல்வியறிவு இல்லாதார் அவையுள் முற்பட்டு (நல்லன) அல்லவற்றைக் கூறி (புல்லரை) வென்று வாழ்பவர், நல்லவையுள் புக்கிருந்து - கல்வியறிவு உடையார் அவையுள் தானே புகுந்து, நாவடங்க கல்வி அளவு இறந்து மிக்கார் அறிவு - பிறர் நாவடங்கும்படி கல்வியில் எல்லையின்றி அறிந்த அறிவுடையோர் அறிவினை, எள்ளிக்கூறல் - இகழ்ந்து கூறுதல், மிளகு உளுஉண்பான் புகல் - (சிறந்த உணவுகள் இருக்க) மிளகின் உளுவை (உண்ணப் புகுவதனோடு ஒக்கும்).