அமைச்சர்கள் கன்றூர்ந்த செயலை வெளிப்படாது மறைத்தாரெனவும், பலகாலம் சென்றபின்னர் மகன் தீர்வு செய்யச் செய்த முயற்சியால் அரசன் அறிந்தான் எனவும் பொருள் கூறுவாருமுளர். கன்றூர்ந்த செயலை மறைத்தார் எனற்குச் சான்று யாதொன்றுமில்லை.இடையில் பலகாலம் சென்றது என்பது பொருத்தமற்றதொன்றாம். 'வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுட ..... அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்' (சிலப்பதிகாரம்) பசு கடைமணி நீருக வாயில் மணியை நெடுநாள் சென்றபின்னர் அசைத்தது என்று கூறுவது பொருந்துமாறு என்னை? இதனால், பசுவினால் அரசன் அறிந்ததாகக் கூறலாமேயன்றி மகன் முயற்சியால் அறிந்ததாகக் கூறுவதற்குச் சான்று யாண்டுளது? ஆகவேஇவையனைத்தும் உரையன்மை யறிக. 'முறைமைக்கு மூப்பிளமை இல்' என்பது பழமொழி. (2) 243. முறைதெரிந்து செல்வர்க்கும்நல்கூர்ந் தவர்க்கும் இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து நேரொழுகா னாயின் அதுவாம் ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு. (சொ-ள்.) முறைதெரிந்து - கூறும் முறைமையை யறிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும் - செல்வத்தை உடையவர்க்கும் வறுமையை உடையவர்க்கும், இறை - அரசன், திரியான் - செல்வம்வறுமை நோக்கி நடுநிலையினின்றும் திரியாதவனாய், நேர் ஒக்க வேண்டும் - இருவர் மனமும் ஒப்புமாறு நீதி கூற வேண்டும், முறை திரிந்து - கூறும் முறையினின்றும் வழுவி, நேர் ஒழுகானாயின் - நடுவுநிலையாக ஒழுகா தொழிவானாயின், அது - அங்ஙனம் ஒழுகாத தன்மை, ஒரு பக்கம் நீரொழுகி - தாயின் தனங்களை உண்ணுங் குழந்தைகளுக்கு ஒரு பக்கம் நீரொழுகி; பால் ஒழுகும் ஆறு - மற்றொரு பக்கம் பாலும் ஒழுகு மாற்றைஒக்கும். (க-து.) அரசன் செல்வம், நல்குரவு நோக்காதுமுறையறிந்து நீதி கூறுதல் வேண்டும். (வி-ம்.) தாய் தன் குழந்தைகளுக்குள் நல்ல குழந்தை இது, தீய குழந்தை இஃது என்று அறிந்து பாலும் நீரும்அளித்தல்
|