பக்கம் எண் :

171

இல்லாமைபோல் அரசனும் செல்வம், வறுமை நோக்கி ஒருவற்கு நன்மையும் மற்றவற்குத் தீமையும் வர நீதி கூறலாகாதென்பதாம். தாய் ஒன்றாய் மதித்தல் போல வேறுபாடின்றி நீதி கூறல் வேண்டும். வழக்குற்றார் இருவருள் வென்றவர் மகிழ்தல் இயல்பே. தோற்றார் வருந்துதல் இயல்பே. இருவர்க்கும் ஒப்ப ஒழுகுமாறு என்னை யெனின் தோற்றார்க்குத், தான் 'நடுவு நிலைமையை உடையான் என்பதும்' தோற்றதால் வருந் துன்பத்தினை 'யாவர்க்கும் தோல்வி வெற்றி உண்டு அதற்காக வருந்தாது ஒத்தல் வேண்டுமென்றும்' இழந்த பொருள்மேல் அவர் கொண்ட விருப்பத்தைப் 'பொருளின் இயல்பு மாறி வருதலே ஆதலின் அதனிடம் பற்றுவையா தொழிதல் வேண்டும் என்றும்' அரசன் விரித்துக் கூறவே அவரும் அவரையொப்ப மகிழ்வெய்துவர். இஃது இருவருக்கும் ஒப்பநடந்தவாறாம். 'நேரொக்க வேண்டும்' என்பதும் இது. 'அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி' என்பதே இது.

'ஒரு பக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு' என்பது பழமொழி.

(3)

244. பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர்
அருத்தம் அடிநிழ லாரை - வருத்தாது
கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ
வண்டூதா துண்டு விடல்.

(சொ-ள்.) பொருத்தம் அழியாத பூம் தண் தார் மன்னர் - அரசனுக்குரிய இலக்கணங்கள் நீங்காத அழகிய குளிர்ந்த மாலையை உடைய அரசர்கள், அருத்தம் - இறைப் பொருளுக்காக, அடிநிழலாரை - தன்னடியின் கீழ் வாழும் குடிகளை, வருத்தாது - (மழையின்மை முதலிய காரணங்களால் பொருளில்லாத காலத்து) வருத்துதலைச்செய்யாமலும், கொண்டாரும் போலாதே கோடல் - பொருளுள்ள காலத்து வருத்திக் கொண்டவரைப் போலவும் கொள்ளாது எளிதாகக் கொள்ளுதலுமாகிய, அது - காலமறிந்து கொள்ளுதல், வண்டு - வண்டுகள், ஊதாது - (மொட்டாகிய தேனில்லாத பூக்களை மலராத காலத்து) ஊதிச் சிதையாது, உண்டுவிடல் - தேன் நிறைந்து மலர்ந்த காலத்துத்தேனை எளிதாக உண்ணுமாற்றை (ஒக்கும்).

(க-து.) அரசர்கள் குடிகளிடத்திலிருந்து வாங்கும் இறைப் பொருள்களைக் காலமறிந்து வருத்தாது வாங்குக.

(வி-ம்.) பொருத்தம் என்பன இறைமாட்சியுள் கூறப்பட்டனவேயாம். பொருளில்வழி வருத்துதலிற் பயனில்லையாதலின்