பக்கம் எண் :

172

வருத்தாது என்றும் பொருள்வழி வருத்திப் பெறவேண்டிய தில்லையாதலின் எளிதாகக் கொள்க என்பார், 'கொண்டாரும் போலாதே கோடல்' என்றுங் கூறினார். பொருளில்லாத காலத்து இறைப் பொருளைக் குறைத்தோ, நீக்குதலோ செய்க என்பதாம். 'போலாகாதே' என்பது போலாதே என வந்தது தொகுத்தல் விகாரம். போல என்றது போல் வினை அடியாகப் பிறந்த வினையெச்சம். நால்வகையுவமையும் விரித்தற் கேலாமையின் இடைச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சமன்மை அறிக. அஃது ஆகாதே என்னும் எதிர்மறை வினையெச்சத்தோடு புணர்ந்து நிலைமொழி அகரமும் வருமொழியின் இடையிலுள்ள உயிர்மெய்யும் கெட்டுப் போலாதே என நின்றது.

'வண்டூதா துண்டு விடல்' என்பது பழமொழி.

(4)

245. பாற்பட்டு வாழ்ப வெனினும் குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம்
கோல்தலையே யாயினும் கொண்டீக காணுங்கால்
பால்தலைப் பாலூறல் இல்.

(சொ-ள்.) பாற்பட்டு வாழ்ப எனினும் - (அரசன்) தன் ஆணைக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றவர்களேயாயினும், குடிகள் மேல் - குடிகளிடத்து, மேற்பட்ட கூட்டு - தமக்குச் சேரவேண்டிய மிகுந்த இறைப்பொருள்கள், மிக நிற்றல் வேண்டா - அவர்களிடத்தில் நீண்ட நாட்கள் நிற்றலைச் செய்யவேண்டா; கோல் தலையே ஆயினும் கொண்டீக - அரிந்த தாளின் தலையிலுள்ள நெல்லேயாயினும் கொள்ளுங்காலமறிந்து உடனே கொள்க; காணுங்கால் - ஆராயுமிடத்து, பால் தலை பால் ஊறல் இல் - (சேரக்கறக்கலாமென்று சிலநாள் விட்டுவைத்தால்) பாலுள்ள இடத்தில் (மடியில்) பின்னர்ப் பால் சுரத்தலில்லையாதலால்.

(க-து.) அரசன் இறைப்பொருளைச் சிறிது சிறிதாகக் காலமறிந்து கொள்கஎன்பதாம்.

(வி-ம்.) 'பாற்பட்டு வாழ்ப எனினும்' என்றது சோர்வு கொள்ளாதொழிதல் வேண்டா என்பதாம். சிறிது சிறிதாகக் கொள்க என்பார் கோல்தலையைக் கூறினார். முன்னர் 'மிக நிற்றல்' என்றமையின் கொள்ளுங் காலமறிந்து என்று கூறப்பட்டது. நெல்லேயாயினும் காலங்கடப்பின் வந்து சேருதல் இல்லையாம். கொண்டு ஈக என்னும் இரு சொற்களும் ஒரு சொல்லாய் நின்று 'கொள்க' என்னும் பொருளைப் பயந்து நின்றன. மேற்பட்ட கூட்டிற்கு, கோல்தலையையும் மிக நிற்றலுக்குக்