பக்கம் எண் :

174

நினைத்துக் குடிகளிடத்தில் பொருள் பெற்றுச் செய்வதால் அவர்கள் துன்பமடைவரேயன்றி இன்பமடையார். கொண்டையை அறுத்தவுடன் மயில் இறந்துபடுதலின் வாயிலிட்டாலும் அதனால் அதற்கு ஒருபயனுமேற்படுவதில்லை.

'சூட்டறுத்து வாயி லிடல்' என்பது பழமொழி.

(6)

247. வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் பொங்கு
படுதிரைச் சேர்ப்ப! மற் றில்லையே யானை
தொடுவுண்ணின் மூடுங் கலம்.

(சொ-ள்.) படுதிரை பொங்கு சேர்ப்ப - மிகுந்த அலைகள் பொங்கி எழுகின்ற கடல் நாடனே!, வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு - தனது வெண்மையான கொற்றக்குடை நிழலின்கீழ் உயிர்வாழ்கின்ற குடிமக்கட்கு, வேந்தனும் செங்கோலன் அல்லாக்கால் - அரசன் செம்மையான கோலையுடையவன் அல்லாதவிடத்து, செய்வது என் - அவர்கள் செய்வது யாது?, யானை தொடு உண்ணின் மூடுங்கலம் மற்று இல்லை - யானை தனது கரத்தால் தொட்டு அக்கலத்தை உருட்டி உண்ணின் அதனைமூடுங்கலம் வேறொன்றும் இல்லையாதல்போல.

(க-து.) கொடுங்கோலரசனின் கீழுள்ள குடிகள் இறந்து படுதலேசெய்யத்தக்க செயலாம்.

(வி-ம்.) வேந்தனும் : உம்மை - சிறப்பும்மை.

'கோனிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை'

என்பாராதலின், உயிர்கள் இறந்தொழிவதேயன்றிச் செய்யத்தக்க செயல் ஒன்றுமில்லை. மிக்க வலிவுடைய யானையே உருட்டி உண்ணநினைப்பின் அதனை மறைக்க முடியாதவாறுபோல குடிகள்செய்யத்தக்கது ஒன்றுமில்லையாம்.

'இல்லையே யானை தொடு எண்ணின் மூடுங் கலம்' என்பது பழமொழி.

(7)

248. ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்
களியானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்
துளியுண் பறவைபோல் செவ்வன்நோற் பாரும்
எளியாரை எள்ளாதார் இல்.