ஆழியான் ஆயினும் - ஆழிப்படையை உடைய திருமாலேயாயினும், சேர்ந்தாரும் - தன்னைச் சேர்ந்தவர்களும், எள்ளுவர் - இகழ்வார்கள்; தண்கோல் - தன்கீழ் வாழ்வாரிடத்துச் செலுத்தும் செங்கோலே, மெய் - உண்மையாக, எடுக்கும் -வெற்றியைத் தோற்றுவிக்கு மாதலான். (க-து.) அரசனது வெற்றிக்கு அவனது செங்கோலேகாரணமாம். (வி-ம்.) சேர்ந்தாரும் என்றமையானே பகைவரும் என்பது பெறப்படும். பகையரசர்களிடத்தே சிறிது கொடுங்கோன்மை கொள்ளினும், அதனைவிடத் தங்குடிகளிடத்தே செலுத்தும் செங்கோன்மையே வெற்றியைத் தர வல்லதாம். செங்கோலனாயொழுகவே குடிகள் தம் உடல், பொருள், ஆவி மூன்றினையும் அவன் பொருட்டு அளிப்பராதலின் அவன் வெல்லுதல் உறுதியென்பார், ‘மெய்'என்றார். 'தண்கோல் எடுக்குமாம் மெய்' என்பது பழமொழி. (10) 251. மன்னவன் ஆணைக்கீழ் மற்றையார் மீக்கூற்றம் என்ன வகையால் செயப் பெறுப - புன்னைப் பரப்புநீர் தாவும் படுகடல் தண்சேர்ப்ப! மரத்தின்கீழ் ஆகா மரம். (சொ-ள்.) புன்னை பரப்பு நீர் தாவும் படுகடல் தண் சேர்ப்ப - புன்னைப் பரப்பின்கண்ணே நீர் பாய்கின்ற மிக்க நீர் பொருந்திய கடலை உடைய குளிர்ந்தநாடனே!, மரத்தின் கீழ் மரம் ஆகா - ஒரு மரத்தின் கீழே வைக்கப்பட்டுள்ள மரம் ஓங்கி வளர்தல் இல்லை (அதுபோல), மன்னவன் ஆணைக்கீழ் - அரசனது ஆணை செல்கின்ற விடத்து, மற்றையார் - ஏனையோர், மீகூற்றம் - தம்மை மிகுத்துக்கூறும் தமது ஆணையை, என்ன வகையால் செயப்பெறுப - எப்பெற்றியால் செலுத்துவார்கள், (செலுத்தக்கூடாதாம்.) (க-து.) அரசன் ஆணையின்கீழ், பிறர், தமது,ஆணையைச் செலுத்துதல் இயலாதாம். (வி-ம்.) மரத்தின்கீழ் மரம் வளராததுபோல அரசனாணையின் கீழ் பிறராணை நடைபெறாது. மீக்கூற்றம் - மேம்படுத்திக் கூறுதல்;அஃது ஆணைக்கு ஆயிற்று. 'மரத்தின் கீழ் ஆகா மரம்' என்பது பழமொழி. (11)
|