பக்கம் எண் :

178

252. வழிப்பட் டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும் - விழுத்தக்க
பையமர் மாலைப் பணைத்தோளாய்!பாத்தறிவென்
மெல்லக் கவுட்கொண்ட நீர்.

(சொ-ள்.) விழு தக்க பைஅமர் மாலை பணை தோளாய் - சிறப்பினை உடைய மேன்மை பொருந்திய மாலையை அணிந்த பெருத்த தோளினை உடையாய்!, கவுள் கொண்ட நீர் - கன்னத்திலடக்கிய நீரைக் குடிக்கவும் செயலாம், உமிழவுஞ் செய்யலாம்; (அதுபோல), வழிபட்டவரை - தம்மை வழிபாடு செய்தொழுகிய குடிமக்களை, வலியரா செய்தார் - வலியராகச் செய்யவல்ல அரசர்கள், அழிப்பினும் ஆக்கினும் ஆகும் - அக்குடிமக்களை அழிக்கினும் அன்றி ஆக்கினும் அவை அவராலியலும்; மெல்ல பாத்து அறிவுஎன் - இதற்கு மெல்லப் பகுத்துஅறிதல் என்னை?

(க-து.) குடிமக்களை ஆக்கலும், அழித்தலும்அரசர்களால் செய்ய இயலாது.

(வி-ம்.) வழிப்பட்டவர் என்றது, தன்னாணையின் கீழ்ப்பட்டுத் தமக்கு அடங்கி நடக்கும் குடிமக்கள் என்றவாறாம். 'வலியராச் செய்தார்' - குடிமக்கள் செல்வத்தில் வலியுடையராகச் செய்யத்தக்க அரசர்கள்; செய்தார் எனினும் செயத்தக்கார் என்பது பொருளாகக் கொள்க;பின்னரும் ஆக்கின் என வருதலின் அரசர்கள் என்பார், 'வழிப்பட்டவரை வலியராச் செய்தார்' என்றார். அரசனும் இறையெனப்படுதலின் அளித்தல், அழித்தல் அவனுக்குரியவாயின என்றார். அழித்தல், ஆக்குதல் என்பன செல்வத்தை அழித்தல் ஆக்குதல் என்பனவாம். கவுளில் கொண்ட நீர் குடித்தற்கும் உமிழ்தற்கும் அமைதல் போலத் தன் கீழ்ப்பட்ட குடிகளைச் செல்வத்தால் உயர்த்துதலும், தாழ்த்துதலுஞ் செய்ய அரசன் வல்லனாம் என்பதாம். அறிவு என்பது வகர உகர விகுதிபெற்ற தொழிற்பெயர்.

'கவுள் கொண்ட நீர்' என்பது பழமொழி.

(12)

253. தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும் மென்தோளாய்! அஃதன்றோ ஓரறையுள்
பாம்போ டுடனுறையும் ஆறு.

(சொ-ள்.) மலைமிசை காம்பு அனுக்கும் மென்தோளாய் - மலைமீதுள்ள மூங்கிலை வருத்தும் மென்மையான தோள்களை உடையாய்!,