பக்கம் எண் :

179

தலைமை கருதும் தகையாரை - தலைமை நிலையைப் பெறவேண்டும் என்று கருதும் தன்மை உடையவர்களை, வேந்தன் - அரசன், நிலைமையால் நேர்செய்து இருத்தல் - அவர் அஃதிலராகப் புறத்தே நடிக்கும் வஞ்சக நிலையால் அவரைத் தம்மையொப்பத் தலைமை செய்து தான் சோர்ந்திருத்தல், அது - அங்ஙனமிருத்தல், ஓர் அறையுள் - ஓர் அறையினுள்ளேயே, பாம்போடு உடன் உறையும் ஆறு - ஒருவன்பாம்போடுகூடத் தங்கியிருத்தலை ஒக்கும்.

(க-து.) வஞ்சனை உடையாரைத் தலைமைசெய்து அரசன் சோம்பிஇருத்தல் ஆகாது.

(வி-ம்.) 'கருதும்' என்றமையால் தலைமைபெறவேண்டுமென்ற விருப்பம் மனத்தகத்ததாம். 'நிலைமையால்' என்றமையால் அஃதிலார் போன்று புறத்தே ஒழுகுதலை. அது,

‘........ கூடுகளிற் றெருத்தினிட்ட
வண்ணப்பூந் தவிசுதன்னை ஞமலிமேல் இட்டதொக்கும்
கண்ணகன் ஞாலங் காத்தல்'

எனக் கட்டியங்காரன் கூறுவது போல்வது.

'நேர் செய்திருத்தல்' என்பது சச்சந்தன் கட்டியங்காரன் உள்ளமோராது புறநிலையால் அரசளித்து இன்பத்துள் ஆழ்ந்திருந்தமை போல்வது. பாம்போ டுடனுறைவார் உயிரை இழத்தல் உறுதியாமாறுபோல வஞ்சக நெஞ்சமுடையாரைத் தலைமை செய்தாரும் அரசினை இழத்தல் உறுதியாம். மனத்தால் நினைத்து வாழ்ந்தார் அது பற்றுக்கோடாக அரசியலைப் பற்றுதல் உறுதியாம்.இதுவன்றி உயிருக்கும் தீங்கிழைப்பர் என்பதாம்.

ஓரறையுள் பாம்போ டுடனுறைந் தற்று' என்பது பழமொழி.

(13)

254. கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது - ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய்! செய்வதென்
வல்லை அரசாட் கொளின்.

(சொ-ள்.) முல்லைபுரையும் முறுவலாய் - முல்லைமலரை ஒத்த புன்முறுவலை உடையாய்!, கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து - இயமன் உயிரினைக் கொள்ளுங்காலத்தில், குறிப்பு - அவர்தங் குறிப்பினையும், உடையாரை - தன்னால்உயிர்கொள்ளப்படுதலுடையார் கூறும்,