பக்கம் எண் :

18

(க-து.) கல்லார் கற்றாரை இகழ்ந்து கூறின் தீமையைஅடைவர்.

(வி-ம்.) அல்லவையை அலைத்து வாழ்ந்த அத்துணிபு கொண்டு - நல்லவையையும் அலைத்து வாழ எண்ணுவராயின் மிளகின் உளுவை உண்டவன் அடையும் பயனை அடைவர்.
மிளகு, சாதிக்காய், ஏலக்காய் முதலியவற்றில் உள்ள உளுவைஉண்டவர் பிழைத்தல் அரிதென்பர்.

'மிளகு உளு உண்பான் புகல்' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(7)

24. நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார்
புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள்வில் லேற்றி
இடைக்கலத்து எய்து விடல்.

(சொ-ள்.) நல்லவை கண்டக்கால் நா சுருட்டி - கல்லார் கல்வி அறிவுடையோர் அவையைக் கண்ணுறுவராயின் தமது நாவினை மடக்கி, நன்றுணராப் புல்லவையுள் - நன்மை தீமை இன்ன தென்றறியாத புல்லர்கள் வாழும் அவையின்கண், தம்மைப் புகழ்ந்து உரைத்தல் - தம்மைத் தாமே இல்லன கூறிப் புகழ்ந்துரைத்தல், புல்லார் புடை தறுகண் அஞ்சுவான் - பகைவரிடத்துள்ள அஞ்சாமையைக் கண்டு பின்வாங்குகின்றவன், இல் உள் வில் ஏற்றி - வீட்டின் உள்ளே வில்லின்கண் அம்பை ஏற்றி, இடைக்கலத்து எய்து விடல் -கருங்கலங்களிடையே எய்வதனோடு ஒக்கும்.

(க-து.) கல்லார் தம்மினத்தாரிடையே தம்மைப் புகழ்ந்து கொள்வர்.

(வி-ம்.) நாச்சுருட்டி எனவே அவர்நாநீளம் உடையார் என்பது பெறப்பட்டது.

புல்லார் - பகைவர், தம்மைச் சேராதவர் என்பது பொருள். புல்லுதல் - தழுவுதல், தம்மைத் தழுவுதல். புல்லார் - தம்தைத் தழுவுதல் இல்லாதோர், பகைவர். 'இல்லுள் வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்' - இஃது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

(8)