பக்கம் எண் :

180

மாற்றம் - மாற்றத்தினையும், அறிந்து ஆராயாது - ஆராய்ந்து அறிவதில்லை; (அதுபோல), அரசு - அரசன், ஆற்றவும் வல்லை ஆட்கொளின் - குடிகளை மிகவும் விரைந்து துன்புறுத்தி அடிமை கொள்ளின், செய்வது என் - செய்வது என்ன இருக்கின்றது?

(க-து.) குடிகளை முறையின்றித் துன்புறுத்தி அடிமைகொள்ளும் அரசன் கூற்றுவனை ஒப்பான்.

(வி-ம்.) முல்லை : ஆகுபெயர்; குறிப்பினையும். மாற்றத்தினையும் ஆராய்தலில்லை என்க. மாற்றம் - மறுமொழி. மறு என்ற முதனிலையடியாக எதிருரைத்தலுக்கு வழங்கிய மரபுச் சொல். இறக்கும் நிலையிலுள்ளார் தம்முன் ஒருவர் நின்று வினாவுவார் போன்று நினைத்துத் தாம் விடையிறுத்தலின் மாற்றம் என்றார். அன்றி நினைவு தடுமாறி மாறி உரைக்கும் உரையெனினுமமையும் அரசன் முறையின்றித் துன்புறுத்துவனாயின் குடிகள் என்ன கூறினும் அதனைக் கேளான், கூற்றுவன் கேளாதது போல. 'குறிப்பு அறிவதில்லை' என்றது கூற்றுவன் காலக்கடவுளாதலின் அவர்காலம் முடிவுறுஞான்று அவருயிரைக் கொள்ளுவதல்லது அவருள்ளக் குறிப்பினை அறிவதிலன். கொடுங்கோல் மன்னன் குடிகள் என்ன கூறினாலும் கேளாதுயமனைப்போன்று துன்புறுத்துவன் என்பதாம்.

'செய்வது என் வல்லை அரசு ஆட்கொளின்' என்பது பழமொழி.

(14)

255. உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்த னாகி - நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல், குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல்.

(சொ-ள்.) உடை பெருஞ் செல்வத்து - உடைமையாகிய மிக்க செல்வத்தினை உடைய, உயர்ந்த பெருமை - உயர்ந்த பெருமை தரத்தக்க முதன்மையை, அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி - அடக்கமில்லாத உள்ள முடையனாகி, நடக்கையின் ஒள்ளியன் அல்லான்மேல் - ஒழுக்கத்தினும் தூய்மையுடையவன் அல்லாதவனிடத்து, வைத்தல் - அரசன் கொடுத்தல், குரங்கின் கை கொள்ளி கொடுத்துவிடல் -குரங்கினது கையில் கொள்ளியைக் கொடுத்துவிடுதலைஒக்கும்.

(க-து.) அரசன் அற்பர்களுக்கு முதன்மையை அளிப்பது தீமையை அளிக்கும்.