(வி-ம்.) உடைமை கடைக்குறையாயிற்று. 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்' என்றலின், 'நடக்கையினும்' என்னும் சிறப்பும்மை. விகாரத்தாற் றொக்கது. 'உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை' என்றலின், இஃது அவ்வதிகாரத்தாயிற்று. முதன்மை சிறந்ததாயினும் அதனையுடையானது இயல்பு பற்றிக் கொள்ளிக்கு ஒப்பாயிற்று. அடக்கம், தூய்மை முதலியன இன்மையின் அதனை உடையான் குரங்கிற் கொப்பாயினன். இதனால் தனக்கும் பிறர்க்கும் மிக்க தீங்கு விளையும்என்பதாம். 'குரங்கின் கைக் கொள்ளி கொடுத்துவிடல்' என்பது பழமொழி. (15) 256. எல்லையொன்று இன்றியே இன்னாசெய் தாரையும் ஒல்லை வெகுளார் உலகாள்தும் என்பவர் சொல்லின் வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே கொல்லையுள் கூழ்மரமே போன்று. (சொ-ள்.) உலகு ஆள்தும் என்பவர் - உலகினை ஆளக்கடவேம் எனக் கருதும் அரசர்கள், எல்லை ஒன்று இன்றி - வரையறையென்ப தொன்று இல்லாமல், இன்னா செய்தாரையும் - தீமை செய்தவர்களையும், ஒல்லை வெகுளார் - விரைந்து சினத்தலிலர்; கொல்லையுள் கூழ்மரமே போன்று - மனைப்படப்பையின்கண் ஒருவன் தனக்கு உணவாகப் பயன்படுமாறு வைத்து வளர்க்கப்பெறும் மரமே போல, சொல்லின் வளாய் - சொற்களால் வளைத்து, தம்தாள் நிழல்கீழ் கொள்ப - தமது அடிநிழலின்கீழ் இருக்கச்செய்து பாதுகாத்துக்கொள்வர். (க-து.) பகைவரையும் நட்பாகக் கொண்டுஒழுகுதலே அரசனது ஆக்கத்திற்கு ஏதுவாம். (வி-ம்.) 'உலகாள்தும்' என்பவர் என்றார், 'பகை நட்பாக்கொண்டொழுகும் பண்புடை யாளன், தகைமைக்கண் தங்கிற்றுலகு' என்றலின். தனக்குணவாகப் பயன்படுமாறு ஒருவன் தனது கொல்லையுள் வைத்த மரத்தைக் காத்தல் போல, அரசனும் பகையினைத் தன் தாள் நிழற்கீழ் கொண்டு பாதுகாவல் செய்வான் என்பதாம். பகையேற்பட்டுழி இவர்களும் அவரோடு சேர்ந்து போரிழைப்பாராதலின்,அங்ஙனஞ் சேராதவாறு தன்னோடு கூட்டவே பகையினை வென்றுஉலகினை ஆளலாம் என்பதாம். 'கொல்லையுள் கூழ்மரமே போன்று' என்பது பழமொழி. (16)
|