257. பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல். (சொ-ள்.) இலங்கைக் கிழவற்கு இளையான் - இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன், பொலர் தார் இராமன் துணையாக - பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, தான் போந்து - தான் சென்று (அவனது சார்பைப் பெற்று), இலங்கைக்கே போந்து இறையாயதும் பெற்றான் - இலங்கைக்கே தலைவனாய அரசபதவியை அடைந்தான், (ஆதலால்) பெரியாரைச் சார்ந்து - பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, கெழீஇ இலார் இல் - (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்)பயன் அடையாதார் இல்லை. (க-து.) பெரியோரைச் சார்ந்தொழுகுவார்பயன்பெறுவர் என்பதாம். (வி-ம்.) அரசன் பெரியோர்களுடைய சார்புகொண்டு ஒழுகின் எல்லா நலங்களையும் எய்தலாமென்பார்,வீடணன் இராமன் சார்பைப் பெற்று அரசியலடைந்தமையைக்கூறினார். 'பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்' என்பது பழமொழி. (17) 26. அமைச்சர் 258. கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும் கொல்சின வேந்தன் அவைகாட்டும் - மல்கித் தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை. (சொ-ள்.) தலை மல்கி பாய் இழிதரு தண்புனல் நீத்தம் மலையிடம் நிறைந்து பரந்து இழிகின்ற குளிர்ந்த புனலின் பெருக்கம், மலைபெயல் காட்டும் துணை - மலையிடத்துப் பெய்த மழையது அளவை அறிவிக்குமாறுபோல, கொல் சின வேந்தன் - பகைவரைக் கொல்லுகின்ற சினத்தையுடைய அரசனது, கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும் - கல்வியது பெருக்கத்தையும் நீதி கூறும் முறையையும், அவை காட்டும் - அவனது அவையே அறிவித்து நிற்கும்.
|