(க-து.) அரசனது கல்விப்பெருக்கத்தையும், நீதிகூறும் முறையையும் அவனது அவை காட்டிநிற்கும். (வி-ம்.) கட்டுரை என்பது, அரசன் வேண்டிய ஏதுக்களை எடுத்துக்கூறி அவற்றின் முடிவாகிய நீதிகூறலின் நீதி என்னும் பொருள தாயிற்று. தான் முடிந்த முடிபாக நினைத்த பொருளை, அதற்குப் போதிய ஏதுக்களை மிகுதியாக எடுத்துக்கூறி முடிவு செய்தலையும் கட்டுரை என்ப. இது வியாசம் என்பதை ஒத்தது. இஃது ஒரு பொருளை வியாஜ்ஜியமாகக்கொண்டு கட்டுரைப்பதென்பதாம். 'அவை காட்டும்' என்றது அவையிலுள்ள அமைச்சர்கள் அறிவிப்பர் என்பதாம். அமைச்சர்களுடைய தன்மை கண்டே அரசன் தன்மையை அறியலாம்; அரசனது தன்மையை அறிவதற்கு அவனது அவை ஏதுவாயிற்று. துணை என்றது அளவை. 'இனைத்துணைத் தென்பதுஒன் றில்லை' என்றதுங் காண்க. 'இழி தரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை' என்பது பழமொழி. (1) 259. செயிர்அறு செங்கோல் சினவேந்தன் தீமை பயிர்அறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும் செவ்வாய் முறுவல்நற் சின்மொழியாய்! செய்தானை ஒவ்வாத பாவையோ இல். (சொ-ள்.) துகிர் புரையும் செவ்வாய் முறுவல் நல் சில் மொழியாய் - பவளத்தை ஒக்கும் சிவந்த வாயினையும் புன்முறுவலையும் இனிய சிலவாகிய மொழியினையும் உடையாய்!, செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை - குற்றமற்ற செங்கோலையும் சினத்தையும் உடைய அரசனது தீமையை. பயிர் அறு பக்கத்தார் கொள்வர் - குற்றமற்ற பக்கத்திலுள்ள அமைச்சர்களே முன்நின்று ஏற்றுக்கொள்ளக் கடவர், செய்தானை - செய்தவனை, ஒவ்வாத பாவையோ இல் -ஒத்திராத சித்திரமோ உளவாதல் இன்மையான். (க-து.) அரசன் செய்யும் தீமை அமைச்சர்களைச் சாரும்என்பதாயிற்று. (வி-ம்.) 'பக்கத்தார்' என்றார், ஆசிரியரும் 'உழையிருந்தான்' என்றலின் ஒவ்வாத என்றது கருத்திற்கு ஒவ்வாமையாம். சித்திரிப்பானது கருத்திற்கொவ்வாத சித்திரம் உளவாதல் இல்லை. அமைச்சர்களது கருத்திற்கொவ்வாதசெயல்களும்
|