அரசன்மாட்டு உளவாதல் இல்லை. அரசனது தீயசெயலை அவர் முன்நின்று இடைவிலக்காதொழியின் அஃது அவரது கருத்திற்குமிசைந்ததாகக் கொள்ளப்படும். உறுதிகூறலாகிய தங்கடமையினின்றும் நீங்கியதால் இது நிகழ்ந்தமையின் இஃது அமைச்சர்கள் கொள்ளக்கடவதே யென்பதாம். உறுதி கூறாக்கால் அவனதிறுதி யெய்தற் குற்றத்தை உலகந் தன் மேலேற்றுமென்பார், 'கூறல் கட' னென்றார் என்று பிறர் விரித்துரைத்ததுங் காண்க. பாவையது நன்மை தீமைக்குச் செய்வோன் காரணமாதல்போல, அரசனது நன்மை தீமைக்கும்,அமைச்சர்கள் காரணமென்பதாம். 'செய்தானை ஒவ்வாத பாவையோ இல்' என்பது பழமொழி. (2) 260. கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான் உற்றுஇடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம் மரையா துணைபயிரும் மாமலை நாட! சுரையாழ் நரம்பறுத் தற்று. (சொ-ள்.) மரையா துணைபயிரும் மாமலை நாட - பெண் மான்கள் தந்துணைகளை அழைக்கும் சிறந்த மலைநாடனே!, கற்றார் பலரை தன் கண்ணாக இல்லாதான் - நீதிநூல்களைக் கற்ற அமைச்சர்களைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத அரசன், உற்று - யாதாயினும் ஒரு துன்பம் வந்துற்று, இடர்பட்ட பொழுதின் கண் - அத்துன்பத்தில் தான் அகப்பட்டு நின்றபொழுது, தேற்றம் - தானே ஒருவகையாகத் துணிதல், சுரையாழ் நரம்பு அறுத்தற்று - ஒரு நரம்பினையுடைய சுரைபொருந்திய யாழின் அந்த ஒரு நரம்பையும் அறுத்தாற் போலும். (க-து.) அமைச்சர்களின்றித் தானே ஒரு காரியத்தை அரசன் துணிந்தால்,அத்துணிவால் பயனுண்டாதல் இல்லை. (வி-ம்.) ஒரு நரம்புடைய யாழின் அவ்வொரு நரம்பையும் அறுத்துவிட்டால் அவ்யாழ் பயன்படாதொழிதல்போல, அமைச்சர்களின்றி அரசன் துணியும் துணிவும் பயனற்றொழியுமென்பதாம். யாழ்வகையுள் ஒன்று, ஒற்றை நரம்புடையது. பழைய பொழிப்புரை செங்கோட்டியாழ் என்று கூறுகின்றது. அடியார்க்கு நல்லார் உரை ஏழு நரம்புகளையுடையது செங்கோட்டியாழ் என்று கூறுகின்றது. ஆதலின் பழைய பொழிப்புரை கூறியது ஆராயத்தக்கது. சுரை என்றது செருகும் சுரையணியாம். 'தேற்றம்' என்றால் ஆராய்ந்து முடிவுகூறுந்தன்மை
|