அரசரிடத்தும் உளவாகலான். 'தானே சூழ வல்லனாயினும் அளவிறந்த தொழில்களால் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரானல்லது நடவாமைபற்றி அவரைக் கண்ணாகக் கூறினார்' என்று பிறரும் கூறியது காண்க. 'சுரையாழ் நரம்பறுத் தற்று' என்பது பழமொழி. (3) 261. நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும் நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின் வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு. (சொ-ள்.) நல்லவும் தீயவும் நாடி - நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து அறிந்து, பிறருரைக்கும் கட்டுரையின் - மாறு கொண்ட இருவர் கூறும் கட்டுரை யொன்றானே, நல்ல பிறவும் உணர்வாரை - நீதி அநீதி என்பனவற்றை அறியும் அமைச்சர்களை, வல்லிதின் நாடி வலிப்பதே - ஆழ்ந்து ஆராய்ந்து தம்மோடு கொண்டு அரசன் வாழ்தலே, புல்லம் புல்லத்தை புறம் புல்லுமாறு - ஆனேறு ஆனேற்றோடு இணைந்து அன்பு பூண்டு ஒழுகுமாறு போலும். (க-து.) 'அரசன், அறிவான்மிக்க அமைச்சர்களோடுகூடியொழுகின் அரச காரியங்கள் இனிதுநடைபெறும் என்பதாம். (வி-ம்.) வலிமைபெற ஆராய்தலாவது - ஆழ்ந்து ஆராய்தல் ஒரு காளை மற்றொரு காளையோடு மாறுபாடின்றி இணைந்து ஒழுகின் பொலிவு பெற்றிருத்தலோடு அவைகளால் முடியும் காரியங்கள் இனிது விரைந்து முடிதல்போல, அரசன் அறிவால் தன்னையொத்த அமைச்சர்களோடு இணைந்து ஒழுகின் அரசகாரியங்கள் இனிதுவிரைந்து முடியுமென்பதாம். புல்லுதல் - மனத்தாற் புல்லுதல்.காளைகள் மாறுபட்டு ஒழுகின் காரியம் நடத்தலில்லை என்பது அறிந்தது ஒன்று. காளைகள் போல - உலக இயலாகிய வண்டியைச் செலுத்துவதற்கு, அரசன் - அமைச்சர்கள் என்போர்கள் இன்றியமையாதவர்கள் என்பதாம். 'புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு' என்பது பழமொழி. (4) 262. மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி - நினைத்திருந்து ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல்லெனில் சென்று படுமாம் உயிர்.
|