(சொ-ள்.) செய்கை அனைத்தினும் - செய்கின்ற செய்கையின்கண் எல்லாம், மனத்தினும், வாயினும் மெய்யினும் - மனத்தானும் வாயானும் மெய்யானும், ஆன்று அவிந்தா ராகி - மிகவும் அடங்கியவர்களாகி, நினைத்து இருந்து - ஆராய்ந்து, ஒன்றும் பரியலராய் - ஒன்றையும் விரும்பாதவராய், ஓம்புவார் - உலகத்தைக் காவல் செய்கின்ற அமைச்சர்கள், இல்லெனில் - இலராயின், உயிர் சென்று படும் -உயிர்கள் இறந்தொழிதல் திண்ணம். (க-து.) நல்ல அமைச்சர்களே உயிர்கள் வாழ்ந்திருத்தற்குக் காரணமாவர். (வி-ம்.) அமைச்சர்மாட்டு நிகழ்தல் சிறிதாயினும் அதனால் உலகிற்கு விளைதல் பெரிது ஆதலின், மனம், மொழி, மெய்களால் விரைந்து செய்தலின்றி அடக்கி ஆராய்ந்து செய்வர் என்பது. அன்றி மூன்றினையும் முற்ற அவித்தமுனிவர்களைப் போன்று அடக்கி என்றலுமாம். செய்கை அனைத்தினும் என்றதற்கு செய்கையான் வேறு வேறு ஆகத் தோன்றும் பொருள்களின் உண்மையை அறிந்து மூன்றினையும் அடக்கினார் என்பதாகக் கொள்க. 'மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல' என்றார் பிறரும். செயல்களில் பற்றின்றி இருத்தல் அமைச்சர்க்குக் கொள்க. 'ஒன்றும் பரியலராய் ஓம்புவார்இல்லெனில் சென்று படுமாம் உயிர்'என்பது பழமொழி. (5) 263. செயல்வேண்டா நல்லனசெய்விக்கும்; தீய செயல்வேண்டி நிற்பின் விலக்கும்; இகல்வேந்தன் தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால் முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல். (சொ-ள்.) மூத்தார் வாய்ச்சொல் - அறிவான் மூத்த அமைச்சர்கள் கூறும் சொற்கள், செயல் வேண்டா நல்லன செய்விக்கும் - செய்யமுடியாத நல்லனவற்றைச் செய்விக்கும்; தீய செயல் வேண்டி நிற்பின் - அரசன் தீயசெயல்களைச் செய்ய முனைந்து நிற்பின், விலக்கும் - இடைநின்று தடுத்தலைச் செய்யும், இகல் வேந்தன் தன்னை - மாறுபாடுடைய அரசனை, நலிந்து - வலியுறுத்தி, தனக்கு உறுதி கூறலால் - அவன்றனக்கு உறுதியாயினவற்றைக் கூறுதலால்.முன் இன்னா - முன்னே துன்பந்தருவதாக இருக்கும் (பின்னே மிக்க இன்பத்தை அளிக்கும்.) (க-து.) அமைச்சர் கூறும் சொற்கள் நல்லன செய்விக்கும் தீயன விலக்கும் என்பதாம்.
|