பக்கம் எண் :

187

(வி-ம்.) அரசனை நலிதலாவது - அவன் தனித்திருந்த விடத்து அது செய்தல் தகாது என்று பன்முறையும் எடுத்துக் கூறுதல். அமைச்சர்கள் கூறும்பொழுது சிறிதுகாலம் இன்னாதாய் இருப்பினும் பின்னர் நெடுங்காலம் அடையக்கூடிய இன்பத்தை அஃது அளித்தலின் அரசர்கள் அமைச்சர் சொற்கேட்க என்பதாம்.

'முன் இன்னா மூத்தார்வாய்ச் சொல்' என்பது பழமொழி.

(6)

264. செறிவுடைத்தார்வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப்
பிள்ளை களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல்
ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது.

(சொ-ள்.) செறிவு உடை தார் வேந்தன் - நெருங்கிய மாலையை உடைய அரசன், செவ்வி யல பெற்றால் - தான் உறுதி கூறவும் கேளாது நல்லதல்லாவற்றைச் செய்யப்பெறுவனாயின், அறிவு உடையார் - அறிவுடைய அமைச்சர்கள், அம்புலிமேல் - சந்திரனிடத்து, வறிது உரைத்து சிலவற்றையிட்டுக்கூறி, பிள்ளைகளை மருட்டும் தாயர் போல் - குழந்தைகளை மிரட்டி உண்பிக்கின்ற தாய்மார்போல, அவ்வியமும் செய்வர் - சூழ்ச்சிமுதலியன செய்தலோடு பொய் உரைத்து வஞ்சித்தாயினும் அவனை அச்செயலினின்றும் மீட்பர், ஒள்ளிய காட்டு - உண்மையாய ஒள்ளிய எடுத்துக்காட்டுக்களை வற்புறுத்திக் கூறித் திருத்துதல், ஆளர்க்கு அரிது - அவனால் ஆளப்படுவார்க்கு அரிதாகலான்.

(க-து) அமைச்சர்கள் பொய் உரைத்தாயினும் அரசனை நல்வழிப்படுத்துவர்.

(வி-ம்.) அவ்வியம் செய்தலாவது, இச்செயலிற்புகுந்தால் இன்னது விளையுமென்று பொய்கூறி அரசனைத் திருத்துதல். அவ்வியம் முதலியன கடியத்தக்கன வாயினும் அரசனை நெறி நிறுத்துதற்பொருட்டுப் பயன் படுத்தப்படுகின்றன வாதலின் அமையும் என்பார் அவ்வியமும் செய்வர் என்றார். அரிது என்பது அம்புலியின் இன்மைக் குணங்களை இல்லாதன கூறி உண்பித்தல் போல, பொய் முதலிய கூறி அரசனை நல்வழிப்படுத்துவர் என்பதாம். 'ஒள்ளிய காட்டு ஆளர்க்கு அரிது' என்றது அரசன் ஆணைக்குக் கீழ்ப்பட்டு நடப்போர் இது செய்தல் தகாதென வற்புறுத்தித் கூறமுடியாது என்பது. உறுதிகூறித் திருத்தல் அமைச்சர் கடமையாதலின், இங்ஙனம் கூற இயலாதாயினும் பொய் முதலியன கூறியாவது திருத்துவர் என்பதாம்.

'ஒள்ளிய காட்டு ஆளர்க்கு அரிது'என்பது பழமொழி.

(7)