25. நடலை இலராகி நன்(று) உணரார் ஆய முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள் உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல் கடலுளால் மாவடித் தற்று. (சொ-ள்.) நடலை இலராகி நன்று உணரார் ஆய முடலை முழுமக்கள் - மனத்தின்கண் கவலை யிலராய் நன்மை தீமை அறியாதவராகிய மனவலியுள்ள கயவர்கள், மொய் கொள் அவையுள் - நெருங்கியுள்ள அவையில், உடலா ஒருவற்கு - அலைத்து வாழ்கின்ற கயவன் ஒருவனுக்கு, உறுதி உரைத்தல் - உயிர்க்குப் பயன்தரத் தக்கனவற்றைக் கூறுதல், கடலுள் மாவடித்தற்று - கடலுள்ளே மாங்கனியை வடித்தாற் போலும். (க-து.) கயவற்கு உறுதிப்பொருள்களைக்கூறுதலாகாது. (வி-ம்.) கன்னெஞ்சம் உடையார் என்பார் முடலை முழு மக்கள் என்றார். அவர் இழிவு தோன்ற 'மொய்கொள் அவை' என்றார். அவருக் குரைத்த உறுதிகள் யாவும் கமருள் உகுத்த அமுது எனப் பயன்படாது ஒழியும் என்பதாம். ஆல் : அசை. 'கடலுளால் மாவடித் தற்று' - இஃது இச்செய்யுளிற் கண்ட பழமொழி. (9) 4.அறிவுடைமை 26. அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன் பிறிதினால் மாண்ட(து) எவனாம் - பொறியின் மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன அணியெல்லாம் ஆடையின் பின். (சொ-ள்.) பொறியின் - சாணையாற் கழுவுதலையுடைய, மணி பொன்னும் - இரத்தினாபரணமும் பொன்னாபரணமும், சாந்தமும் மாலையும் இன்ன அணி எல்லாம் - கலவையும் பூமாலையும் இவைபோன்ற பிற அணிகள் யாவும், ஆடையின் பின் - அழகுறச் செய்வதில் உடையின் பின்னேவைத்து எண்ணத்தக்கனவாம். ஆதலால், அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன் - அறிவினாலாகிய பெருமை ஒருசிறிதும் பெறாத ஒருவன், பிறிதினால் மாண்டது எவனாம் - செல்வத்தைப் பெற்றதனால் மாட்சிமையுடையதனால் அவனுக்கு என்ன பெருமையைக் கொடுக்கும்?
|