அவர் ஏவிய செயலைத் துன்புறுதலின்றிச் செய்யத் தொடங்குக, அது செய்க என்றான் உண்க என்னும் அது அன்றோ -அச்செயல் செய்க என்று கூறியவன் உண்க என்று கூறியதைஒக்குமன்றோ? (க-து.) அரசன் ஏவியதைத் தட்டாது செய்யத் தொடங்குக. (வி-ம்.) முடியாததை முடியாது என்று கூறுவதால் வரும் குற்றம் இல்லையாயினும், அரசன் ஏவல் கொள்ளலின் அருமை நோக்கியாயினும் மேற்கொள்ளாதொழிதலின் பேதைமையே என்று ஏகாரங் கொடுத்துத் தேற்றினார். 'எவ்வ மிலராகிச் செய்க' என்று எவ்வத்தைத் தன்னொடு படுத்துக் கூறியது அரசன் ஆணையால் செயல் எவ்வமின்றி முடியும்.நீ துன்புறாதொழிக என்பதாம். வேலையைச் செய்யுமாறு தூண்டியவன் உண்க என்று சொல்லுதல்போல, ஏவிய அரசன் செயல் முடிதற்கேற்ப உதவி செய்து முடிப்பான் என்பதாம். ஆதலின், நீ வருந்தாது ஆளாக இருந்துசெய்யத் தொடங்குக என்பதாம். 'செய்கொன்றான் உண்கென்னு மாறு' என்பது பழமொழி. (2) 268. எமரிது செய்கஎமக்கென்று வேந்தன் தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின் ஆலென்னிற் பூலென்னு மாறு. (சொ-ள்.) எமர் எமக்கு இது செய்க என்று - எம்மவராதலான் எமக்கு இச்செயலை முடித்துத் தருக என்று, வேந்தன் - அரசன், தமரை தலைவைத்த காலை - தன்கீழ் வாழ்வாரை ஒரு செயல் செய்யும்பொருட்டு நம்பி நியமித்த இடத்து.தமர் - அவன் கீழ் வாழ்வார், அவற்கு வேலின் வாயாயினும் வீழார் - அவர் பொருட்டாக வேலிடத்தாயினும் வீழாதவர்களாகி, மறுத்துரைப்பின் - இயலாது என்று மறுத்துக் கூறலின் (அஃது), ஆல் என்னில் - அதோ தோன்றுவது (பெரிய) ஆலமரமென்று ஒருவன் கூறலுறின், பூல் என்னும் ஆறு - (அதற்கு மாறாக) மற்றொருவன் அது சிறிய பூலாச் செடியே என்று கூறுதலை ஒக்கும். (க-து.) அரசன் ஏவலை மேற்கொண்டார் உயிர் கொடுத்தாயினும் அதனை முடித்தல் வெண்டும்.
|