(வி-ம்.) எமர், தமர் என்பன உறவினர் எனப் பொருள் படுதலின்றி, எம்மவர், தம்மவர் எனப் பொருள்பட்டு நின்றன. [இவை கிளை நுதற் பெயராதற்கு முன் நின்ற முதற்படிகளாம்.] 'வேலின் வா யாயினும்' என்றது வீழ்தலின் அருமை நோக்கி உயர்வு சிறப்பாய் நின்றது.இதுசெய்தல் செஞ்சோற்றுக்கடன் கழித்தவாறாம். 'தலைவைத்த' என்றது உறுதியாக நம்பித் தலைமை கொடுத்தலாதலான், அதற்கேற்பப் பெரிய ஆல் என்றும் சிறிய பூல் என்றுங் கொள்ளப்பட்டன. தோன்றுகின்ற வடிவத்தைப் பெரியது என்று கருதி ஒருவன் ஆலமரம் என்றானாக, மற்றொருவன் அதனையே சிறிது என்று கருதிப் பூலாச் செடி யென்று கூறினான். இதுபோல ஆகும், உறுதியாக நம்பித் தலைமை நல்கிய ஒருவனுக்கு அதற்கு மாறாகஇல்லை யென்று கூறுதல். 'ஆலென்னிற் பூலென்னு மாறு'என்பது பழமொழி. (3) 269. விடலமை செய்துவெருண்டகன்று நில்லாது உடலரு மன்னர் உவப்ப வொழுகின் மடலணி பெண்ணை மலிதிரைச் சேர்ப்ப கடல்படா வெல்லாம் படும். (சொ-ள்.) மடல் அணி பெண்ணை மலி திரை சேர்ப்ப - மடல்களையுடைய பனைமரங்கள் மலிந்த கடல் நாடனே! உடலரு மன்னர் - பிறரால் வெல்லுதற்கரிய வலிமையுடைய அரசர்கள், விடல் அமை செய்தும் - தம்மைவிட்டு நீங்குமாறு நெருங்கி நின்று ஆகாதன செய்தும், வெருண்டு அகன்று நில்லாதும் - அஞ்சி அகன்று நில்லாதும், உவப்ப ஒழுகின் - அவர் மனமகிழ ஒழுகுவராயின், கடல்படா எல்லாம் படும் -கடலில் உண்டாகாத வளமெல்லாம் அவர்க்கு உளவாம். (க-து.) மன்னரைச் சேர்ந்தொழுகுவார்அகலாது அணுகாது வாழக்கடவர். (வி-ம்.) ஈரிடத்தினும் உம்மை விகாரத்தாற் றொக்கன. விடலமை செய்து என்றது, அவர் தம்மை நீக்குமாறு குறிப்பறியாது அணுகிச் சில கூறுதலை. இதனால் கூறுவார்க்குத் துன்பமே உண்டாம். அகன்று நில்லாது என்றது அரசருக்குப் பயந்துநீங்கி நிற்றலை. இதனால் அரசரால் வரும் பெரும் பயன் இல்லையாம். உவப்ப ஒழுகின் என்றது, அகலாது அணுகாது தீக்காய்வார் போன்று ஒழுகுக வென்பதாம். உடலரு மன்னர் என்றார். பிறரும் 'இகல் வேந்தன்' என்றலின்.
|