வலிய எருத்துதன் கொம்பு கூரிது - வலிமிக்க எருதினுடைய கொம்பு கூரானது; (ஆதலான்), செரு கெழு மன்னர் திறல் உடையார் - போரையுடைய அரசர்களாகிய எல்லாத் திறனுமுடையாரை, சேர்ந்தார் - அடைந்தவர்கள், ஒருத்தரை அஞ்சி - பிறர் ஒருவருக்குப் பயந்து, உலைதலும் உண்டோ - மனந்தளர்தலும் உண்டோ? (இல்லை.) (க-து.) அரசரேயன்றி அவரைச் சார்ந்தோரும்பிறருக்கஞ்சார். (வி-ம்.)கொம்பு மொண்ணையாயினும் எருத்தின் வலிமையால் கூர்மையாதல்போல, சேர்ந்தார் வலியிலராயினும் அரசரது சார்பான் யார்க்கும் அஞ்சா உரம் உடையவராவர் என்பதாம். 'கூரிது எருத்து வலியதன் கொம்பு' என்பது பழமொழி. (6) 272. வேந்தன் மதித்துவப்பப் பட்டாரைக் கொண்டேனை மாந்தரும் ஆங்கே மதித்துணர்வர் - ஆய்ந்த நலமென் கதுப்பினாய் நாடின்நெய் பெய்த கலனேநெய் பெய்து விடும். (சொ-ள்.)ஆய்ந்த ந(ல்)லமென் கதுப்பினாய் - ஆராய்ந்த நல்ல மெல்லிய கூந்தலை யுடையாய்!, வேந்தன் மதித்துவப்பப் பட்டாரை - அரசனால் நன்குமதிக்கப்பட்டு அவனது மகிழ்ச்சிக்கு இடமானவரை, கொண்டு - அவன் மதிக்கின்ற தன்மை ஒன்று கொண்டே, ஏனை மாந்தரும் - ஏனை மக்களும், ஆங்கே மதித்து உணர்வர் - அவனைப்போன்றே மிக மதித்து உணர்வர், நெய் பெய்த கலனே நெய் பெய்துவிடும் - நெய் இருந்த ஏனமேநெய் பெய்தற்கு அமையுமாறுபோல. (க-து.)அரசனால் மதிக்கப்பட்டார் ஏனையோராலும் மதிக்கப்படுவர். (வி-ம்.)'கொண்டு' என்றது அவரது அருமை பெருமை அறியாராயினும், அரசன் மதிக்கின்ற தன்மை ஒன்றுகொண்டே எல்லோரும் புகழ்வர் என்பதாம்.நெய்யிருந்த கலம் நெய் பெய்தற்கு அமையுமாறுபோல, அரசரால் மதிக்கப்பட்டார் ஏனையோராலும் மதிக்கப்படுவர். 'நெய் பெய்த கலனே நெய் பெய்துவிடும்'என்பது பழமொழி. (7)
|