பெறுதல் அரிதாம். அஃதறிந்து உரைப்பாரைப்பெறின் முடியாததொன்றில்லை என்பதாம். வலிமையெனப்படும் விறல் என்பது அதனது மிகுதிஉணர்த்திநின்றது. 'புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன்' என்பது பழமொழி. (10) 276. இடுகுடைத்தேர் மன்னர்எமக்கமையு மென்று கடிதவர்தாம் காதலிப்பத் தாம்காதல் கொண்டு முடிய எனைத்தும் உணரா முயறல் கடிய கனைத்து விடல். (சொ-ள்.) இடு குடை தேர் மன்னர் - நிழலிடுகின்ற குடையினை உடைய தேர்மன்னர், எமக்கு அமையும் என்று - எமக்கு இது பொருந்தும் என்று, கடிது அவர் தாம் காதலிப்ப - மிகவும் அவர்கள் விரும்புவனவற்றை, தாம் காதல்கொண்டு - அவர்களைச் சார்ந்தொழுகுவார் விரும்பி, முடிய - முடியும்படி, எனைத்தும் உணரா முயறல் - ஒன்றனையும் ஆராயாது முயற்சி செய்தல், கடிய கனைத்து விடல் - கொடிய புலி முதலாயினவற்றைத் தன்மாட்டு அழைத்ததனோ டொக்கும். (க-து.) அரசனைச் சார்ந்தொழுகுவார் அரசன் விரும்புவனவற்றைவிரும்பாதொழிதல் வேண்டும். (வி-ம்.) 'காதலிப்ப' என்றது நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை யென் றின்னோரன்னவற்றை. அவர் விரும்புவனவற்றைத் தாமும் விரும்பவே, உயிர்க்கிறுதிவரும் என்பார், 'கடிய கனைத்து விடல்' என்றார். அவர் விரும்புவனவற்றை விரும்பாதொழியவே எல்லாச் செல்வமு முளவாம் என்பதாம். உணரா : ஈறுதொக்க எதிர்மறை எச்சம். தாம் நினைத்தது முடியாது ஒழிதலேயன்றித் தமக்கே இறுதி வரும் என்பது, ‘கடியன கன்றவிடல்' என்பதும் பாடம். கனை என்பது ஓசைக்குறிப்பு. 'கனைசிலை சும்மை' என்றதூஉங் காண்க. இஃது இடைநிகர்த்த ஓசையாதலின்,அஃறிணைக்கண் ஒருசாரனவற்றிற்கு மரபாக வழங்கப்படுகின்றது. 'கடிய கனைத்து விடல்' என்பது பழமொழி. (11) 277. சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்துங் கெட்டாலும் நேர்த்துரைத் தெள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த கிளையின்றிப் போஓய்த் தனித்தாயக் கண்ணும் இளைதென்று பாம்பிகழ்வா ரில்.
|