(சொ-ள்.) பாம்பு - பாம்பானது, சீர்த்த கிளை யின்றிப் போய் தனித்தாயக் கண்ணும் - மிக்க சுற்றத்தினின்றும் நீங்கிப் போய்த் தனிப்பட்ட இடத்தும், இளைது என்று இகழ்வார் இல் - இளையது என்று கருதிச் சோம்பியிருப்பார் இலர்; (அதுபோல), சீர்த்தகு மன்னர் - சீர்மை தக்க அரசர்களுடைய, சிறந்த அனைத்துங் கெட்டாலும் - சிறப்பெல்லாம் கெட்டவிடத்தும், நிலை நோக்கி - அவர் நிலைமையை நோக்கி, நேர்த்து உரைத்து - மாறுபட்டுக் கூறி, எள்ளார் -இகழாராகுக. (க-து.) அரசன் சீர்கெட்டவிடத்தும் அவனை இகழ்வார் தீமையையேஅடைவர். (வி-ம்.) நேர்த்து என்பது நேர்ந்து என்பதன் வலித்தலன்று. நேர் என்பது உடன்பாடு எதிர்மறை என்ற இருபொருட்கண்ணும் வருதலின், ஒருசொல் லெனப்படாது இருசொல் எனவே படும் நேர்ந்து என்பது உடன்பாட்டுப் பொருளுடைய நேர் என்பதினின்றும் தோன்றிற்று. நேர்த்து என்பது எதிர்மறைப் பொருண்மை யுடைய நேர் என்பதினின்றும் தோன்றியது. இகழ்வார் என்பது அப்பொருண்மைத்தாதல், 'செல்வாரல்லர் என்று யானிகழ்ந்தனனே' என்பதனா னறிக. பாம்பு இளைதென்று இகழ்வார் இறுதி எய்தல்போல,நிலைமைநோக்கி இகழ்வாரும் இறுதி யெய்துவர். 'இளைதென்று பாம்பிகழ்வார் இல்' என்பது பழமொழி. (12) 278. செருக்குடைய மன்னரிடைப்புக் கவருள் ஒருத்தற் குதவாத சொல்லின் தனக்குத் திருத்தலு மாகாது தீதாம் அதுவே எருத்திடை வைக்கோல் தினல். (சொ-ள்.) செருக்கு உடைய மன்னர் - தருக்குடைய அரசர்களது, இடை புக்கு - இடையே புகுந்து, அவருள் ஒருத்தற்கு உதவாத சொல்லின் - அவர்களுள் ஒருவருக்கும் பயன்படாதவற்றை ஒருவன் சொல்லின், தனக்கு திருத்தலும் ஆகாது - தன் சொல்லால் வேறுபட்ட அவர்களைத் திருத்தவும் முடியாது, தீதாம் - தீதாக விளையும், அது - அங்ஙனங் கூறல், எருத்து இடை - இரண்டு எருதுகளின் இடையேயுள்ள, வைக்கோல் - வைக்கோலை, தினல் - ஓர் எருது இடைப்புக்குத் தின்னலுறுதலை யொக்கும். (க-து.) அரசர்களிடை ஒன்றனைக் கூறவிரும்புவார் ஒருவரைச் சார்ந்து நின்று கூறுக.
|