பக்கம் எண் :

20

(க-து.) செல்வம் உடையோரினும் அறிவுடையாரேசிறந்தோர் ஆவர்.

(வி-ம்.) ஆடையில்லானை அணிகள் அழகுறச் செய்யாமை போல அறிவில்லானைச் செல்வம் பெருமையுறச் செய்யாது என்பதாம். பொறித்தல் - பொலிவுபெறச் செய்தல்; கலன்களைப் பொலிவு பெறச் செய்தலின் பொறி என்பது சாணை என்னும் பொருளதாயிற்று. செல்வம் இரண்டனுள் கல்விச் செல்வம் பிரிக்கப்பட்டமையின் பிறிதுஎன்பது செல்வம் என்னும் பொருளதாயிற்று.

'மணிபொன்னும் சாந்தமும்மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்.'

இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(1)

27. ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்
மாயிரு ஞாலத்து மாண்(பு) ஒருவன் போல்கலார்
பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்
காய்கலா ஆகும் நிலா.

(சொ-ள்.) பாய் இருள் நீக்கும் மதியம்போல் - பரவிய இருளைப் போக்கும் சந்திரனைப்போல, பல் மீனும் நிலா காய்கலா ஆகும் - பல விண்மீன்கள் ஒன்றுகூடினும் நிலவை எறிக்கமாட்டா. (அதுபோல), அறிவிலார் ஆயிரவரானும் தொக்கக்கால் - அறிவு இல்லாதவர்கள் ஆயிரம்பேர் திரண்டனராயினும், மாஇரு ஞாலத்து - பெருமையை உடைய பெரிய இவ்வுலகின் கண, மாண்பு ஒருவன் போல்கலார் - அறிவினால் மாட்சிமைப்பட்ட ஒருவனைப்போல் விளங்கார்.

(க-து.) அறிவிலார் பலர் திரண்டாலும் அறிவுடையான் ஒருவனைஒவ்வார்.

(வி-ம்.) ஆனும் என்பது ஆயினும் என்பதன் சுருக்கம். பல நட்சத்திரங்கள் திரண்டாலும் ஒரு சந்திரனைப்போல் உலகிற்குப் பயன்படாமை போல, அறிவிலார் பலர் திண்டாலும் அவரால் உலகிற்குப் பயன் ஒரு சிறிதும் இல்லையாகும். ஆயிரவரானும் என்பது எண் இறந்தமையைக் குறிப்பது. 'பல்மீனும் மதியம்போல் நிலாக்காய்கலா ஆகும்' - இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.