282. தாமேயும் தம்மைப் புறந்தர வாற்றாதார் வாமான்றேர் மன்னரைக் காய்வ தெவன்கொலோ ஆமா உகளும் அணிவரை வெற்ப! கேள் ஏமாரார் கோங்கேறி னார். (சொ-ள்.) ஆமா உகளும் அணி வரை வெற்ப - காட்டுப்பசுக்கள் துள்ளி மகிழ்ந்துலாவுகின்ற அழகிய மலைநாடனே!, கேள் - உற்றுக் கேட்பாயாக, கோங்கு ஏறினார் - கோங்கமரத்தின் மீது ஏறினவர்கள் ஏமம் ஆரார் - பாதுகாவலை யடையார், (அதுபோல), தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார் - தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியாதார், வா(வு)ம் மான் தேர் மன்னரை காய்வது என்கொல் - தாவிச்செல்லுகின்ற குதிரை பூட்டப்பெற்ற தேரினையுடைய அரசரைச் சினத்தல் என் கருதி? (க-து.) அரசனைச் சார்ந்தொழுகுவார் தாமுந்தூயராயிருந்து அரசனைத் திருத்துதல் நல்லது. (வி-ம்.) 'புறந்தர வாற்றாதார்' என்றது தன்னைத் தீய செயல்களினின்றும் நீக்கிக்கொள்ள முடியாதாரை. அத்தீய செயலுடையார் நன்னெறி நிறுத்தும்பொருட்டு அரசனைக் கோபிப்பாராயினும், அது தீயதெனப் பட்டு அரசரால் தீமை விளையும் என்பதாம். ஆகவே, அவர் முதலில் தூயராய் இருத்தல் வேண்டும் எனக் கூறப்பட்டது. அங்ஙனமின்றித் திருத்த அவர் முற்படின் தீமை விளைதல் உறுதி. கோங்கு தன்மீது ஏறினாரைத் தாங்கலாற்றா வலியற்ற மரமாதலின், அதன் கண் ஏறினாரும் தீமையடைதல் உறுதி. ஏமம் + ஆரார் -ஏமாரார் என்றாயிற்று. 'ஏமாரார் கோங்கேறினார்' என்பது பழமொழி. (17) 283. உறாஅ வகையது செய்தாரைவேந்தன் பொறாஅன் போலப் பொறுத்தால் - பொறாஅமை மேன்மேலும் செய்து விடுதல் அதுவன்றோ கூன்மேல் எழுந்த குரு. (சொ-ள்.) உறாஅ வகையது செய்தாரை - செய்யத்தகாதனவற்றைச் செய்தவர்களை, வேந்தன் - அரசன், பொறான் போல பொறுத்தால் - புறத்தே பொறுக்காதவன் போன்றிருந்து உழையார் என்பது கருதி அகத்தே பொறுமை உடை யனாயின், பொறாஅமை - அவன் (மீண்டும்) மனம் பொறா தமைவனவற்றை, மேன்மேலும் செய்துவிடுதல் - இடையீடின்றிச் செய்தல்,கூன்மேல் எழுந்த குரு அது அன்றோ - கூனின்மேல் பெருத்து எழுந்த கட்டியை அது ஒக்குமன்றோ.
|