(க-து.) அரசன் பொறுமை உடையன் என்பது கருதித் தீமைசெய்யற்க. (வி-ம்.) முன்னது இரண்டும் அளபெடைகள் : பின்னது மனம் பொறாது அமைவன எனப் பெயராம். இதுவே அகரந்தொக்கு, 'பொறாமை' எனத் தீயகுணமொன்றற்குப் பெயராய்வரும். பொறான்போன்றது அவனை நல்வழி நிறுத்துதற்பொருட்டாம். அதுவுமறியாது மீண்டும் செய்வானாயின், அது மிக்க துன்பந் தருவதோடு, தம்மால் நீக்கமுடியாததாய்விடும். முதுகின் கண் எழுந்த கட்டி துன்பந் தருவதோடு, தன்னால் நீக்க முடியாத தாய் விடுதல் போல அஃது ஆகும்என்பதாம். 'கூன்மேல் எழுந்த குரு' என்பது பழமொழி. (18) 284. பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன் தெருளுந் திறந்தெரிதல் அல்லால் - வெருளவெழுந்து ஆடு பவரோடே யாடார் உணர்வுடையார் ஆடுபணைப் பொய்க்காலே போன்று. (சொ-ள்.) உணர்வு உடையார் - இயற்கை நுண்ணறிவு உடையார், பொருளல்லார் கூறிய பொய்க்குறளை - ஒரு பொருளாகவும் மதிக்கப்படாதார் கூறிய பொய்யாகிய குறளையை, வேந்தன் தெருளும் திறம் தெரிதல் அல்லால் - அரசன் தெளியும் வகையினை ஆராய்ந்து கூறுவதல்லாமல், வெருள எழுந்து - குறளை கூறினார் வெருளுமாறு எழுந்து, ஆடு பணை பொய்க்கால் போன்று - அசைகின்ற மூங்கிலால் செய்யப்பட்ட பொய்யாகிய கால்கள் போன்று, ஆடுபவரோடு ஆடார் - குறளைகூறுவாரோடு ஆடுதலிலர். (க-து.) அரசனைச் சார்ந்தொழுகுவார், அவன் உண்மையினைத் தெளியஅறியுமாறு கூறுதல் வேண்டும். (வி-ம்.) வெருள எழுந்து போன்று ஆடார் என்க. 'வெருள எழுதலாவது' பொய் கூறியவர்களும் நாங்கூறிய துண்மைதானோ வென் றையுறுமாறு அவரின் மேம்பட்டுக் கூறுதல். இயற்கை நுண்ணறிவு உடையராயின் அவர் உண்மையறிந் துரைப்பர்.மூங்கிலால் செய்யப்பட்ட பொய்க்காலாதலின்அசைதல் அதனியல்பாயிற்று. 'ஆடுபணைப் பொய்க்காலே போன்று' என்பது பழமொழி. 'ஆடுமணைப் பொய்க்கால்' என்பதும் பாடம். (19)
|