பக்கம் எண் :

202

28. பகைத்திறம்

285. வன்சார் புடைய ரெனினும் வலிபெய்து
தஞ்சார் பிலாதாரைத் தேசூன்ற லாகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
அஞ்சுவார்க் கில்லை யரண்.

(சொ-ள்.) மஞ்சுசூழ் சோலை மலை நாட - மேகங்கள் சூழ்ந்து நிற்கும் சோலைகளை உடைய மலை நாடனே!, வன்சார்பு உடையார் எனினும் - வலிமை உடையராயினாரைச் சார்பாகப் பெற்றிருப்பினும், தம்சார்பு இலாதாரை - தம்முடைய வலிமையாகிய சார்பைப் பெற்றிராதவரை. வலிபெய்து- வலிமை உண்டாக்குவித்து, தேசு ஊன்றல் ஆகுமோ - புகழிற்குக் காரணமாகிய செயல்களில் அவரை நிலைநாட்ட இயலுமோ, யார்க்கு ஆனும் - யாவர்க்காயினும், அஞ்சுவார்க்கு - மனம் அஞ்சுவார்க்கு, அரண் இல்லை -அரண்களாற் பயனில்லை யாதலால்.

(க-து.) அரசன் எத்துணைச்சார்பு பெற்றிருப்பினும் அவன் சார்பு அவனுக்கு இன்றியமையாத தொன்றாம்.

(வி-ம்.) தேசு, காரணத்திற் காயிற்று. மனமஞ்சுவார்க்கு அரணாற் பயனில்லையாதல் போல, தம் வலியில்லாதார்க்குத் துணைவலியால் வெற்றியெய்துதல் இல்லையாம்; துணை வலியாற் பயனில்லையாக முடியும்.

'யார்க்கானும் அஞ்சுவார்க் கில்லை யரண்' என்பது பழமொழி.

(1)

286. எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்
தனிமரம் காடாத லில்.

(சொ-ள்.) எதிர்த்த பகையை - தம்பொருட்டு நின்ற பகைவர்களை, இளைதாய போழ்தே - பகைமை தோன்றிய காலத்தேயே, அவர் நண்பெல்லாம் - அவர்களுடைய நண்பர்கள் எல்லோரையும், தீர தீர்த்து நனி நயப்ப செய்து - (அவர்களிடம் கொண்ட நட்பினை) முற்ற அறுத்துத் தன்னை மிகவும் விரும்புமாறு செய்துகொண்டு, கதித்து களையின் - விரைந்து வலியறச்