'கடிதிற் கடித்தோடும் பாம்பின்பல் கொள்வாரோ இல்' என்பது பழமொழி. (3) 288. நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம் வரம்பில் பெரியானும் புக்கான் - இரங்கார் கொடியார மார்ப! குடிகெட வந்தால் அடிகெட மன்றி விடல். (சொ-ள்.) கொடி யார மார்ப - தனிவடமாகிய முத்து மாலையை உடையவனே!, நிரையத்தை நிரம்ப கண்டு - பொய் கூறினால் உளவாகுந் துன்பத்தை நூல்களால் மிகுதியாக அறிந்தும், அந்நிரையம் - அந்நரகஉலகத்தின்கண். வரம்பில் பெரியானும் புக்கான் - எல்லையற்ற குணங்களாற் பெரிய தருமனும் அரசாட்சி பெற்றுத் தங் குடியை நிலைநாட்டும் பொருட்டுப் பொய் கூறிப் புகுந்தான் (ஆதலால்), குடி கெடவந்தால் - தங்குடி கெடுமாறு தோன்றுவதொன் றுண்டானால், இரங்கார் - அவர் தீமையுறுதலுக்கு அஞ்சாராகி, அடி கெட மன்றிவிடல் -தங்குடிநோக்கிவேரறத் தண்டஞ் செய்துவிடுக. (க-து.) தங்குடி கெடுமாறு பகைவர் சூழ்ந்து நிற்பாராயின் அரசர் அவர்தங் குடியை வேரறுக்க என்றது இது. (வி-ம்.) தருமன் தன்குடியை நிலைநாட்ட அசுவத்தாமன் இறந்தான் என்று பொய் கூறினன். ஆதலால் குடி குன்ற வருஞ்செயலை எதிர்த்து எது செய்தாலும் ஒழிக்க என்பதாம். 'நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம் வரம்பில் பெரியானும் புக்கான்' என்பது பழமொழி. (4) 289. தமரல் லவரைத் தலையளித்தக் கண்ணும் அமராக் குறிப்பவர்க் காகாதே தோன்றும் சுவர்நிலம் செய்தமையக் கூட்டியக் கண்ணும் உவர்நிலம் உட்கொதிக்கு மாறு. (சொ-ள்.) சுவர் நிலம் செய்து அமைய கூட்டியக் கண்ணும் - சுவராகுமாறு மண்ணினைப் பிசைந்து பொருந்துமாறு சேர்த்த விடத்தும், உவர் நிலம் உள் கொதிக்கும் - உவர்மண் உள்ளே கொதிப்புண்டு உதிர்ந்து விடும் (அதுபோல), தமர் அல்லவரை - தமக்கு உறவல்லாத பகைவரை, தலையளித்தக்கண்ணும் - தலையளி செய்தவிடத்தும்,
|