பக்கம் எண் :

205

அவர்க்கு ஆகாது - அவர்க்கு அது நன்மையாகத் தோன்றாது, அமரா குறிப்பு தோன்றும் - விரும்பாதகுறிப்பாகவே தோன்றும்.

(க-து.) பகைவரை நட்பாகக் கோடலரிது என்றது இது.

(வி-ம்.) நன்மையும் பகைமை கருதித் தீதாகக் கருதப்படுமென்பார் 'அமராக் குறிப்பு' என்றார். பகைவரைச் சார்ந்தொழுகுவாரை அது செய்யலாமே யன்றி அவரைஅங்ஙனம் செய்து கோடல் அரியதொன்றா மென்க.

'சுவர் நிலம் செய்தமையக் கூட்டியக் கண்ணும்
உவர் நிலம் உட்கொதிக்கு மாறு' என்பது பழமொழி.

(5)

290. முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை
அகம்புகுது மென்றிரக்கும் ஆசை இருங்கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார்
ஒக்கலை வேண்டி அழல்.

(சொ-ள்.) முகம் புறத்து கண்டால் - தம் முகத்தைப் புறத்தே கண்டாலும், பொறுக்கலாதாரை - மனம் பொறாதவர்களை, அகம்புகுதும் என்று இரக்கும் ஆசை - அவர் மனத்தின்கண்புகுவோம் என்று தாழ்மையாக நினைக்கும் விருப்பம், தக்க நெறியிடை - நல்ல வழியின்கண்ணேயே, பின்னும் செலப்பெறார் - தொடர்ந்து செல்லப்பெறாத குழந்தைகள், இருங்கடத்து ஒக்கலை வேண்டி அழல் - பெரிய சுரத்தின்கண் பெற்றோர் தம் புறம் பற்றிச்செல்ல விரும்பி அழுதலைஒக்கும்.

(க-து.) பகைவரது மனத்தை வேறுபாடின்றி யொழியுமாறு திருத்தல் இயலாத தொன்றாம்.

(வி-ம்.) புறங் கண்டளவிலேயே பொறாதார் அகத்தால் ஒருகாலும் ஒத்தல் இலர். நல்ல வழியின்கண்ணேயே செல்லப்பெறாத குழந்தைகள் பாலை நிலத்தில் புறம்பற்றி வர நினைத்து அழுமாற்றை அஃது ஒக்கும்.இயலாததொன் றென்பதாம்.

'அகம்புகுதும்' என்றது மன மொன்றுபடுவோம்என்று நினைப்பதை.

'தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார்
ஒக்கலை வேண்டி அழல்' என்பது பழமொழி.

(6)