எவ்வகை யாயினும் தப்பிப் பிழைத்தல் நன்று என்பது. இக என்னும் முன்னிலையசை ஈக என்று நீண்டு நின்றது. 'சாவாதான் முன்கை வளையுந் தொடும்' என்பது பழமொழி. (9) 294. வென்றடுகிற்பாரை வெப்பித் தவர்காய்வ(து) ஒன்றொடு நின்று சிறியார் பலசெய்தல் குன்றொடு தேன்கலாம் வெற்ப! அதுபெரிதும் நன்றொடு வந்ததொன் றன்று. (சொ-ள்.) குன்றொடு தேன் கலாம் வெற்ப - குவடுகளோடு தேனொழுக்குகள் மாறுபட்டுக் கலாம் விளைக்கும் மலை நாட்டை உடையவனே! வென்று அடுகிற்பாரை - தம்மைக்கொல்ல வல்லவர்களை, வெப்பித்து - கொதிப்பிக்கச் செய்து, அவர் காய்வது ஒன்றோடு நின்று - அவர் காய்வதாகிய ஒரு செயலின் கண்ணே நின்று, சிறியார் - வலிமையாலும் அறிவாலும் சிறியவர்கள், பல செய்தல் - அவர்க்கு மாறுபட்ட பலவற்றைச் செய்தல், அது - அச் செயல், பெரிதும் நன்றொடு வந்தது ஒன்றன்று - மிகவும்நல்லகாலத்திற்குத் தனக்கு வந்ததொரு செயலன்று. (க-து.) வலியார்க்கு மாறுபட்டு நின்று அறிவிலார் செய்வன அவர்க்கே தீங்கினை விளைவிக்கும். (வி-ம்.) இது செய்யின் இவர்க்கு இது விளையும், இதனால் நமக்கு விளைவன இவை என்றாராயும் அறிவு இலராய்ச் செய்தலின், அறிவாலும் சிறியார் எனப்பட்டார். மலையொடு மாறுபடும் தேனாறு என மலைவளஞ் சிறப்பிக்கப்பட்டது. 'நல்ல காலத்திற்காகவா அது வந்தது' என்பது இற்றை ஞான்றும் வழங்குவதொரு பழமொழி. 'அது பெரிதும் நன்றொடு வந்ததொன் றன்று' என்பது பழமொழி. (10) 295. உரைத்தவர்நாவோ பருந்தெறியா தென்று சிலைத்தெழுந்து செம்மாப் பவரே - மலைத்தால் இழைத்த திகவா தவரைக் கனற்றிப் பலிப்புறத் துண்பார் உணா.
|