(சொ-ள்.) உரைத்தவர் நாவோ பருந்து எறியாது என்று - உரைக்கத் தகாதனவற்றை உரைத்தவர் நாவினைப் பருந்து எறிந்துண்ணா தென்று கருதி, சிலைத்து எழுந்து செம்மாப்பவர் - மிகுதி கொண்டு இறுமாந்திருப்பவர்கள், மலைத்தால் - ஒருவர் தம்மோடு மாறுபட்டு நின்றால், இழைத்தது இகவாதவரை - அவர் தம்மைத்தாம் செய்ய நினைத்ததைத் தவறாது முடிக்க வல்லாரை, கனற்றி - வெகுளச்செய்து, பலி புறத்து உணா உண்பர் -பலிபீடத்தின் மேலிட்ட உணவினை உண்பவராவர். (க-து.) அரசர்க்கு யாவரையும் இகழ்ந்துபேசிச் செருக்குறுதல் ஆகாததொன்றாம். (வி-ம்.) 'பருந்தெறியாது என்று' என்றது தமக்கு அழிவில்லை யென்று அவர் கருதியபடி. இகழ்ந்து பேசுதலால் துணையினையும் இழந்து பகைவரால் அழிவர் என்பது 'பலிப்புறத்துண்பார் உணா' என்றது, வீரராய் இறந்து நடு கல்லாகி நிற்பர் என்னும் கருத்தின்றி அழிந்தொழிவர் என்பதைக் குறிப்பித்தது. 'பலிப்புறத் துண்பர் உணா' என்பது பழமொழி. (11) 296. தழங்குகுரல் வானத்துத்தண்பெயல் பெற்றால் கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோ ராற்றால் விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா பழம்பகை நட்பாதல் இல். (சொ-ள்.) தழங்கு குரல் வானத்து தண் பெயல் பெற்றால் - முழங்கும் முழக்கத்தையுடைய மேகத்தின்கண் உள்ள குளிர்ந்த நீரைப் பெற்றால், கிழங்கு உடைய எல்லாம் - கிழங்குடைய புல் முதலியவெல்லாம், முளைக்கும் - முளையாநிற்கும்; ஓராற்றால் விழைந்து சமயம் வாய்த்தபொழுது முரண்கொண்டு நிமிர்ந்து நிற்கும்வரை பகைவருக்குத் துணையாய் நிற்றலை ஒழியும் பொருட்டு விரும்பி, அவரை வேர் சுற்ற கொண்டு ஒழுகல் வேண்டா - அவர்களை அடியோடு நெருங்கிய நட்புடையவர்களாகக் கொண்டொழுதல் வேண்டா; பழம்பகை நட்பு ஆதல் இல் -பழைமையாகப் பகையாயினார் நட்பாக ஒன்றுதல் இல்லையாதலால். (க-து.) பழம் பகைவரை நட்பாகக் கோடல் வேண்டாவென்றது இது. (வி-ம்.) பழம் பகைவரும் சார்பு பெற்ற துணையானே பகையாய்த் தோன்றுவர் என்பது பெறப்படுதலின் பிறிது
|