மொழிதலாயிற்று. 'அடியோடு நட்பாகக் கொள்ளற்க' என்றது, அவர் மனம் தீமை செய்யப் பொருந்தும் என்பதறிவித்தற்கு. ஓராற்றால் விழைந்து என்பது, அவர் பகைவர்க்குத் துணை செய்யாதொழியும் பொருட்டுவிரும்பி என்பதாம். 'ஓர் ஆற்றால் விழைந்து' என்றமையானும், 'வேர் சுற்ற' என்றமையானும் அவரைஇடையிட்டு வைக்க வென்பது. 'பழம்பகை நட்பாதல் இல்' என்பது பழமொழி. (12) 297. வெள்ளம் பகையெனினும்வேறிடத்தார் செய்வதென் கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்புப் புள்ளொலிப் பொய்கைப் புனலூர அஃதன்றோ அள்ளில்லத் துண்ட தனிசு. (சொ-ள்.) புள் ஒலி பொய்கை புனல் ஊர - பறவைகளின் ஒலி நிறைந்து பொய்கைகள் சூழ்ந்த புனல் நாடனே!, வெள்ளம் பகை யெனினும் - வெள்ளம் போன்று அளவற்ற பகைவர்கள் உளரெனினும், வேறு இடத்தார் செய்வது என் - இடையிட்ட நாட்டின்கண் உள்ள அவர்கள் நலிந்து செய்யும் துன்பம் யாது?, கள்ளம் உடைத்தாகி சார்ந்த கழி நட்பு - கரவு உடைத்தாகித் தம்மைச் சார்ந்தொழுகுகின்ற மிகுந்த நட்பொன்றே, அள் இல்லத்து உண்ட தனிசு அஃது அன்றோ - சிறிய இல்லத்தில் தம்மோடு வாழ்வார்மாட்டுக் கொண்ட கடனைஒன்குமன்றோ? (க-து.) அரசர் மனக்கரவுடையாரை அஞ்சித் தற்காக்க என்றது இது. (வி-ம்.) வெள்ளம் என்றமையால் 'ஒன்றே' என்பது கொள்ளப்பட்டது. 'கழி நட்பு' என்றது, கள்ளம் உடையார் அதனை மறைத்தற் பொருட்டு மிகுதியும் நட்புப்பூண் டொழுகுவர் என்று அவர் மனக்குறிப் பறிவித்தபடி. 'அள் இல்லம்' என்றமையால், கடன் கொடுத்தார் அடிக்கடி காணப்படுவர் என்பது பெறப்படும். அவர் தோன்றும் போதெல்லாம் வருத்தமும் ஒன்றித் தோன்றுதல் போல, கரவுள்ள கழி நட்புடையாரால் துன்பம் மிகுதியும் உண்டாம். 'வேறிடம்' 'சார்ந்த' என்ற குறிப்புக்களால் வேறிடத்தார் மாறுகோடல் முன்னறிந்து காக்கப்படுமாகலானும், சார்ந்தார் மாறுகோடல் முன்னறிந்து காக்கப்படாதாகலானும், கேள்போன்ற பகைவர் தொடர்பினைஅஞ்சுக என்பது பெறப்படும். 'அள்ளில்லத் துண்ட தனிசு' என்பது பழமொழி. (13)
|