பக்கம் எண் :

211

298. இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பரியார் தமரா - யடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
மைம்மைப்பின் நன்று குருடு.

(சொ-ள்.) இம்மை பழியும் மறுமைக்கு பாவமும் - இம்மைக்கு வரும் பழியையும் மறுமைக்கு வரும் பாவத்தையும், தம்மை பரியார் தமராய் அடைந்தாரின் - தம்மினின்றும் நீக்காராய் மனக்கறுவுகொண்டு தம்மவராய் ஒட்டிவாழும் நட்பினரைவிட, செம்மைப் பகை கொண்டு சேராதார் தீயரோ - நேர்முகமாகப் பகைக்கொண்டு தன்னை ஒட்டி ஒழுகாதவர்கள் தீயவர்கள் ஆவரோ?, மைம்மைப் பின் குருடு நன்று - பார்வையாகிய ஒளி மழுங்கிய கண்ணினும் பார்வையின்றி நிற்கும்கண்ணே நல்லது ஆகலான்.

(க-து.) உட்பகையுடைய நட்பினரை விடப் புறப்பகையுடைய பகைவரேசிறந்தவர்களாவர்.

(வி-ம்.) இம்மைப் பழியும் மறுமைப் பாவமும் பயக்குஞ் செயல்களை நீக்குதல் நட்பினர் கடமையாம். தங் கடமையினின்றும் அவர் நீங்குதலால் பழியும், பாவமும் விளைத்தவராவர். புறப்பகையுடையார் அவை செய்தற் கியலாமையின் நட்பினரைவிடப் பகைவரே சிறந்தவர்களாவார்கள். மைப்பு என்பது ஒளியிழத்தலாம். மைநிறத்திற்காகிப் பார்வைக்காயிற்று.

'மைம்மைப்பின் நன்று குருடு' என்பது பழமொழி.

(14)

299. பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்
இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு.

(சொ-ள்.) விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப - பரந்து பட்டு அருவிகள் இழிதரும் மலை நாடனே!, பொருந்தாதவரை பொருது அட்ட கண்ணும் - தம்மொடு பொருந்தாதவர்களைப் போரிட்டு வென்றவிடத்தும், இருந்து அமையாராகி இறப்ப வெகுடல் - சோம்பி இருத்தலைச் செய்யாராகி அவர் உயிர் இழக்கும்படி வெகுண்டு நிற்றல், அது - அச்செயல், அரிந்து அரிகால் நீர்படுக்குமாறு - தலையரிந்துவைத்த நெல்லரிதாளை உடனே உழுது அழுகுமாறு நீர் பாய்ச்சுதலோடு ஒக்கும்.