பக்கம் எண் :

212

(க-து.) அரசர் தம் பகைவரை வென்றதோடமையாது வேரறக்களைதல் நல்லது.

(வி-ம்.) அரிந்தவுடனே நீர்புகப் பெய்து அழுகவைத்தல் நிலத்திற்கு உரஞ் செய்தலா யமைதல் போல, பகைவரைவென்றதோ டமையாது அவர் இறுதிபெறச் செய்தல் தனக்குஉரஞ் செய்தலாகும்.

'அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு' என்பது பழமொழி.

(15)

300. வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயோர்
புன்பாட் டவர்பகை கோடல் பயனின்றே
கண்பாட்ட பூங்காவிக் கானலந் தண்சேர்ப்ப!
வெண்பாட்டம் வெள்ளந் தரும்.

(சொ-ள்.) கண்பாட்ட பூம் காவி கானல் அம் தண் சேர்ப்ப! - கண்களின் தகைமையாயுள்ள அழகிய நீலப்பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடல் நாடனே!, வெண்பாட்டம் வெள்ளம் தரும் - பருவ மழையன்றி வேனிற்காலத்து வெண்மழையும் மிகுந்த நீரைத் தருமாதலால், மேலாயோர் - மேலானவர்கள், வன்பாட்டவர் பகை கொள்ளினும் - வலிய தகைமை உடையாரோடு மாறுபாடு கொள்ளினும், புன்பாட்டவர் பகைகோடல் பயமின்று - எளிய தகைமை உடையாரோடு பகைகொள்ளுதலால் ஒருபயனும் இன்று.

(க-து.) அரசன் வலியுடையாரோடு பகை கொள்வானாயினும் அஃதில்லாரோடு கொள்ளற்க என்றது இது.

(வி-ம்.) பருவகாலத்து மழையே யன்றி வேனிற்காலத்து மழையும் வெள்ளத்தை உண்டாக்கும். அதுபோல, வலிமையுடையாரிடத்து வெற்றிபெறுதலே யன்றி, தோற்றலும் சிறப்புடைத்தாம். எளியாரை வெல்லுதலால் வரும் உயர்வு ஒன்றின்மையும் அவரிடம் தோற்றலால் வரும் இழிவின் இழிந்ததொன்றின்மையும் எல்லோரானும் அறியப்பட்டன வாகலின், வலியாரோடு கொள்ளினும் இவர்மாட்டுக் கொள்ளற்கஎன்பது உம்மை எதிர்மறை.

'வெண்பாட்டம் வெள்ளந் தரும்' என்பது பழமொழி.

(16)

301. வாட்டிற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கொனி - காட்டப்
பொருவறு தன்மைகண் டஃதொழிந்தார் அஃதால்
உருவு திருவூட்டு மாறு.